ராணிப்பேட்டை பகுதிகளில், ரேஷன் கடைகளிலேயே டோக்கன் வழங்கல் - சமூகவிலகல் இன்றி பொதுமக்கள் கூட்டமாக வாங்கிச்சென்றனர்


ராணிப்பேட்டை பகுதிகளில், ரேஷன் கடைகளிலேயே டோக்கன் வழங்கல் - சமூகவிலகல் இன்றி பொதுமக்கள் கூட்டமாக வாங்கிச்சென்றனர்
x
தினத்தந்தி 6 April 2020 10:47 AM IST (Updated: 6 April 2020 10:47 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை பகுதிகளில் ரேஷன் கடைகளிலேயே டோக்கன் வழங்கியதால் பொதுமக்கள் கூட்டமாக சமூகவிலகல் இன்றி வாங்கிச்சென்றனர்.

சிப்காட்( ராணிப்பேட்டை),

கொரோனா நோயை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்ககூடாது என்பதற்காக ரேஷன்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களும் வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கப்பட்டு அதில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரத்தில் சென்று சமூகவிலகலை கடைபிடித்து வாங்கிகொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆனால் ராணிப்பேட்டையில் உள்ள 17 வது வார்டில் உள்ள ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் நேரில் வழங்காமல் ராணிப்பேட்டை காரை காட்டன் பஜார் பகுதியில் நின்று கொண்டு அங்கேயே டோக்கனும், பணமும் வழங்கியுள்ளனர். இதனால் பொதுமக்கள் ஒரே இடத்தில் திரண்டு சமூக விலகலை கடைபிடிக்காமல் நெரிசலில் நின்று டோக்கனையும், பணத்தையும் பெற்று சென்றனர். ஆஞ்சநேயர் கோவில் தெருவில் உள்ள ரேஷன் கடையிலேயே டோக்கனும், பணமும் வழங்கப்பட்டது. இதனால் அங்கும்பொதுமக்கள் கூட்டமாக திரண்டிருந்தனர்.

முதல் அமைச்சரின் உத்தரவை மதிக்காதவர்கள் மீதும், சமூக விலகலை கடைபிடிக்காமல் கொரோனா பரவலுக்கு காரணமாக இருப்பவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story