காஞ்சீபுரத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி
காஞ்சீபுரத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இரு வரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
காஞ்சீபுரம்,
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி வெளிநாடுகளைச் சேர்ந்த 16 பேர், டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் காஞ்சீபுரம் காந்திரோடு தேரடி அருகே உள்ள ஒரு பள்ளிவாசலில் தங்கி இருந்தனர்.
இதையடுத்து 16 பேரும் பள்ளி வாசலிலேயே தனிமைப்படுத்துப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். அதில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானதால் அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள் அதே பள்ளி வாசலில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் தவிர அதே பள்ளி வாசலில் தங்கி, சமையல் வேலை செய்து வந்த சமையல்காரரான காஞ்சீபுரத்தை சேர்ந்த ஒருவரையும், அவருடைய உதவியாளரையும் மருத்துவக்குழு கண்காணித்து வந்தது. 2 பேரின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ததில் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து 2 பேரும் உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
டெல்லி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பள்ளி வாசலில் தங்கி இருந்த இந்தோனேஷியாவைச் சேர்ந்தவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் அவர் மூலம் இவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக தெரிகிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 1,018 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக்குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி தெரிவித்தார்.
Related Tags :
Next Story