கோயம்பேடு மார்க்கெட் வரும் பொதுமக்களுக்கு தினமும் 5 ஆயிரம் முககவசங்கள் - ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் தகவல்


கோயம்பேடு மார்க்கெட் வரும் பொதுமக்களுக்கு தினமும் 5 ஆயிரம் முககவசங்கள் - ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் தகவல்
x
தினத்தந்தி 7 April 2020 4:45 AM IST (Updated: 7 April 2020 3:56 AM IST)
t-max-icont-min-icon

கோயம்பேடு மார்க்கெட் வரும் பொதுமக்களுக்கு தினமும் 5 ஆயிரம் முககவசங்கள் விலையில்லாமல் வழங்கப்படுவதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் த.கார்த்திகேயன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் ப.முருகேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள்கள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம் வருமாறு:-

சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி மற்றும் வணிக அங்காடிகளுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முககவசம் அணிவதை கட்டாயமாக்குவதற்காக தினந்தோறும் 5 ஆயிரத்துக் கும் மேற்பட்ட முககவசங்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முககவசங்கள் விலையின்றி வழங்கப்பட்டுள்ளன.

சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தீயணைப்புத்துறை உதவியுடன் கோயம்பேடு வணிக வளாக அங்காடிகள், வாகனங்கள் நுழையும் நுழைவுவாயில்கள் மற்றும் வெளிவாயில்களில் தினந்தோறும் கிருமிநாசினி தெளிக்கப்படுகின்றன.

அதிக பொதுமக்கள் வரத்துக்கொண்ட 10 நுழைவுவாயில்களில் சுமார் ரூ.17 லட்சம் செலவில் சுரங்கப்பாதை தெளிப்பான்கள் அமைக்கும் பணிகளை ஓரிரு நாட்களில் முடிக்க துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கொரோனா தனிமைப்படுத்துதல் மையம் கண்டறியும் குழுவில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய நிர்வாக பொறியாளர்கள் பிற துறை அலுவலர்களுடன் சேர்ந்து பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

பேரிடர் மேலாண்மைக் கான நிதியில் இருந்து தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்திற்கு ரூ.1.88 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி உதவியுடன் கொரோனா தடுப்புப் பணிகளை சிறப்பாக செயல்படுத்துமாறு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.

Next Story