இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வினியோகம்
இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
சென்னை,
கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு கட்டுமான நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த ஏராளமான தொழிலாளர்கள் பல இடங்களில் தவித்து வருகின்றனர். அவர்களது சிரமத்தைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மத்திய துணைத் தலைமை தொழிலாளர் நல ஆணையர் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
தமிழகத்தில், சென்னை முதல் கன்னியாகுமரி வரை, 18 பணியிடங்களில் வேலை பார்த்து வந்த மொத்தம் 13,225 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
அத்தகைய தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் உத்தரவின்படி, நிவாரண உதவிகளை வழங்குவது பற்றி, தமிழக அரசுடன் மத்திய துணைத் தலைமை தொழிலாளர் நல ஆணையர் ஆலோசனை நடத்தினார். அதன்படி, தமிழக நுகர்பொருள் வாணிபக்கழகம் இந்தத் தொழிலாளர்களுக்கு, 225.335 டன் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளது. இந்த பொருட்களின் மதிப்பு ரூ.84 லட்சத்து 33 ஆயிரத்து 494 ஆகும்.
ஒவ்வொரு தொழிலாளிக்கும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்ட நிவாரண பெட்டகம் வழங்கப்பட்டது. 5-ந்தேதி, சென்னையில், இந்த நிவாரண பொருட்கள் மத்திய தொழிலாளர் நல துணைத் தலைமை ஆணையர் முத்து மாணிக்கத்தால் வினியோகிக்கப்பட்டது.
மண்டல தொழிலாளர் நல ஆணையர்கள் சிவராஜன், அண்ணாதுரை, உதவி தொழிலாளர் நல ஆணையர் பிரவீன் பாண்டி மோகன்தாஸ், அமலாக்க அதிகாரி சங்கர ராவ் மற்றும் ஒப்பந்ததாரர்கள், கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நாட்டிலேயே, இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இதுபோன்ற உணவுப் பொருட்கள் மத்திய தொழிலாளர் நல ஆணையரால் வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும் என்று சென்னை, மத்திய துணைத் தலைமை தொழிலாளர் நல ஆணையர் முத்து மாணிக்கம் தெரிவித்தார்.
Related Tags :
Next Story