மும்பை தனியார் ஆஸ்பத்திரியில் 3 டாக்டர்கள், 26 செவிலியர்களுக்கு கொரோனா - அலட்சியம் குறித்து விசாரணை
மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 3 டாக்டர்கள், 26 செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்கப்பட்டு அலட்சியம் குறித்து விசாரிக்கப்படுகிறது.
மும்பை,
மும்பை அக்ரிபாடா பகுதியில் வொக்கார்ட் என்ற தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு பணிபுரியும் 2 செவிலியர்களுக்கு கடந்த மாதம் 28-ந் தேதி கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அடுத்தடுத்த நாட்களில் இந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 10 செவிலியர்களுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தற்போது அந்த தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 3 டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், ஊழியர்கள் என 26 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட 2 டாக்டர்கள் செவன் ஹில்ஸ் ஆஸ்பத்திரியிலும், ஒரு டாக்டர் மாகிமில் உள்ள ரகேஜா ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு டாக்டர் தாராவி அபுதயா வங்கி அருகில் உள்ள கட்டிடத்தில் வசித்து வருபவர் ஆவார்.
அலட்சியம்
ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் தங்களையும் வைரஸ் தாக்கியதாக செவிலியர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து ஒரு செவிலியர் கூறுகையில், ‘‘கொரோனா அறிகுறியுடன் வந்தவர்களுக்கு ஆஸ்பத்திரி பொது வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து எங்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டது’’ என்றார்.
இதேபோல் அலட்சியமாக செயல்பட்ட தனியார் ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்குமாறு செவிலியர் அமைப்பினர் மும்பை மாநகராட்சி கமிஷனரிடம் புகார் அளித்து உள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.
ஆஸ்பத்திரிக்கு சீல்
இந்தநிலையில் கொரோனாவின் கூடாரமாக மாறிய தனியார் ஆஸ்பத்திரிக்கு மாநகராட்சி சீல் வைத்து உள்ளது. ஆஸ்பத்திரியில் உள்ளவர்கள் வெளியே செல்லவும், வெளி ஆட்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மும்பை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் சுரேஷ் ககானி கூறியதாவது:-
தனியார் ஆஸ்பத்திரியை சீல் வைத்து உள்ளோம். முறையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது ஆஸ்பத்திரி ஊழியர்கள் 300 பேரை தனிமைப்படுத்தி உள்ளோம். ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவியது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனாவால் சீல் வைக்கப்பட்ட ஆஸ்பத்திரி செவிலியர்களில் பெரும்பாலானவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதையடுத்து கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மும்பை தனியார் ஆஸ்பத்திரியில் பணியில் ஈடுபட்ட கேரள செவிலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யமாறு மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபேவை கேட்டு கொண்டு உள்ளார்.
Related Tags :
Next Story