கர்நாடகத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 159 ஆக உயர்வு


கர்நாடகத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 159 ஆக உயர்வு
x
தினத்தந்தி 7 April 2020 5:34 AM IST (Updated: 7 April 2020 5:34 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூரு, 

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் 5-ந்தேதி (நேற்று முன்தினம்) வரை 147 பேர் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று (நேற்று) புதிதாக மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. இது தவிர 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். வைரஸ் பாதித்தவர்களில் நேற்று வரை 20 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதிதாக கொரோனா பாதித்தவர்களின் விவரம் வருமாறு:-

பெங்களூருவை சேர்ந்த 32 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அவரது மகன் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார். கேரளாவை சேர்ந்த 62 வயது முதியவர், ஜெர்மனி சென்றுவிட்டு பெங்களூரு திரும்பினார். அவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பெங்களூருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு புறநகர்

மைசூருவை சேர்ந்த 20 வயது இளைஞர், 37 வயது நபர், 57 வயது நபர், 22 வயது இளைஞர், 26 வயது இளைஞர், 32 வயது பெண், 35 வயது இளைஞர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள். ஒருவர் ஏற்கனவே வைரஸ் பாதித்தவருடன் தொடர்பில் இருந்துள்ளார். 26 வயது இளைஞருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களில் 32 வயது பெண், தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

பாகல்கோட்டையை சேர்ந்த 54 வயது நபருக்கு கொரானா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர் ஏற்கனவே கொரோனா பாதித்த தனது மனைவியுடன் தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 58 வயது நபருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வைரஸ் பாதித்தவருடன் இவர் தொடர்பில் இருந்துள்ளார். பெங்களூரு புறநகர் பகுதியை சேர்ந்த 43 வயது நபருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கொரோனா அறிகுறி

கர்நாடகத்தில் மொத்தம் 16 மாவட்டங்களில் இந்த வைரஸ் பரவியுள்ளது. இதில் பெங்களூருவில் 58 பேர், மைசூருவில் 35 பேர், தட்சிண கன்னடாவில் 12 பேர், உத்தர கன்னடாவில் 8 பேர், சிக்பள்ளாப்பூரில் 7 பேர், கலபுரகியில் 4 பேர், பல்லாரியில் 6 பேர், தாவணகெரே, உடுப்பியில் தலா 3 பேர், தார்வார், குடகில் தலா ஒருவர், பீதரில் 10 பேர், பாகல்கோட்டையில் 2 பேர், பெலகாவியில் 7 பேர் மற்றும் பெங்களூரு புறநகரில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா அறிகுறியுடன் நேற்று 47 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story