கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கொரோனா பாதித்தவர்கள் வசித்த தெருக்களும் தனிமைப்படுத்தப்பட்டன
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் வசித்த தெருக்களில் வசிப்பவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த 7 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் சின்னசேலத்தை சேர்ந்த ஒருவர், எலவனாசூர்கோட்டையை சேர்ந்த ஒருவர் என 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் இருவரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர மற்ற 5 நபர்கள் தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெறும் சின்னசேலத்தை சேர்ந்த நபரின் குடும்பத்தினர்கள் மற்றும் எலவனாசூர்கோட்டையை சேர்ந்த நபரின் குடும்பத்தினர்கள் மற்றும் அவர்களுடன் பழகிய உறவினர்கள் என 24 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களுடைய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இவர்கள் 7 பேர் வசித்த குடியிருப்பு பகுதி மற்றும் தெருக்கள், அதன் அருகில் உள்ள தெருக்களுக்கு யாரும் வெளியில் வராத வகையிலும், உள்ளேயிருப்பவர்கள் வெளியே செல்லாதவாறும் இருப்பதற்காக தெருக்களின் இரு முனைகளிலும் மரக்கட்டைகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
இதில் கள்ளக்குறிச்சி வ.உ.சி. நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கொரோனா சிறப்பு வார்டில் உள்ளதால் வ.உ.சி. நகர் 5-வது குறுக்குத்தெரு, 6-வது குறுக்கு தெரு, 4-வது குறுக்கு தெரு ஆகிய 3 தெருக்களில் உள்ள 300 வீடுகளிலிருந்து மக்கள் வெளியே வராத படியும், வெளி நபர்கள் உள்ளே செல்லாதவாறும் தெருக்களின் முனைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை வட்டார மருத்துவ அலுவலர் பங்கஜம், நகராட்சி ஆணையாளர் வெங்கடாசலம் ஆகியோர் பார்வையிட்டனர். அதேபோல் சிதம்பரம் பிள்ளை தெருவில் 150 வீடுகளிலிருந்து மக்கள் வெளியே வராதபடியும், யாரும் உள்ளே செல்லாதபடியும் இருக்க 6 இடங்களில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சின்னசேலம், எலவனாசூர்கோட்டை, மூங்கில்துறைப்பட்டு, எடுத்தவாய்நத்தம் ஆகிய பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளில் தடுப்பு கட்டைகள் அமைத்து சுகாதாரத்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்காக தெருக்களின் இருமுனைகளிலும் உள்ள தடுப்புவேலிக்கு வெளியே தினமும் பால், காய்கறிகள், மளிகை சாமான்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. அதனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் தடுப்பு வேலிக்கு உள்ளேயே நின்று வாங்கிசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் வடபொன் பரப்பியும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. வடபொன்பரப்பிக்கு வரக்கூடிய வடகீரனூர் சாலை, பிரம்மகுண்டம் சாலை மற்றும் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை பிரதான சாலையில் தடுப்புக்கட்டைகள் வைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story