கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14 பேரின் குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதி - ரத்த மாதிரிகளை பரிசோதிக்க முடிவு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14 பேரின் குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயினால் இதுவரை 15 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் மட்டும் இறந்துள்ளார். மீதமுள்ள 14 பேர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களின் குடும்பத்தினர் ஏற்கனவே அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். அவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் வீடு தேடி சென்று வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 14 பேரின் குடும்பத்தினரையும் தனி மருத்துவமனையில் அனுமதித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அவர்கள் 14 பேரின் குடும்பத்தில் உள்ள பெண்கள், குழந்தைகளை விழுப்புரத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அவர்களுக்கு கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல் ஏதேனும் உள்ளதா? என்று டாக்டர்கள் கண்காணித்தனர். மேலும் இவர்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யவும் டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 14 பேரின் குடும்பத்தினரையும் வரவழைத்து அவர்களில் யாருக்கேனும் நோய் தொற்று உள்ளதா? என்று பரிசோதித்து வருகிறோம். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தப்பிரச்சினை உள்ளவர்களை அவரவர் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு கண்காணித்து வருகிறோம். காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவுகளுடன் இருப்பவர்களை மட்டும் தனி வார்டில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை எடுத்து சென்னை ஆய்வகத்திற்கு அனுப்ப உள்ளோம். இதன் முடிவில் நோய் பாதிப்பு இல்லை என்று தெரியவந்தால் அவர்களை இங்கிருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்வதோடு 28 நாட்கள் தொடர்ந்து கண்காணிப்போம்.
தற்போது 14 பேரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிலர் விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இங்கு ஏற்கனவே நோய் தொற்று இல்லாமல் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தவர்களை விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக தனி மருத்துவமனையில் அனுமதித்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.
Related Tags :
Next Story