கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேனி நகர் முழுமையாக முடக்கம் - காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை கடைகளும் மூடல்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேனி நகர் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி கடைகள், தற்காலிக உழவர் சந்தை ஆகியவை மூடப்பட்டு உள்ளன.
தேனி,
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி உள்ளது. தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், போடியை சேர்ந்த ஒரு பெண் பலியாகி உள்ளார். மற்ற 22 பேருக்கும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு மேலும் பரவாமல் தடுக்க பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வரும் பகுதிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த வகையில், போடி, பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. காய்கறி கடைகளும் மூடப்பட்டன. தேனியில் நேற்று முன்தினம் வரை காய்கறி கடைகள், மளிகை பொருட்கள் விற்பனை கடைகள் செயல்பட்டு வந்தன.
இந்நிலையில், நேற்று காய்கறி கடைகள், மளிகை கடைகள் என அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன. தேனி நகர் பகுதியும் முழுமையாக முடக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக அல்லிநகரம் பகுதியில் உள்ள தெருக்களில் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.
நேரு சிலை சிக்னல் பகுதியிலும் இரும்பு தடுப்புகள் வைத்து பெரியகுளம் சாலை முழுமையாக அடைக்கப்பட்டு உள்ளன. தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக உழவர் சந்தையும் நேற்று மூடப்பட்டன. உழவர் சந்தை மற்றும் மளிகை கடைகள் மூடப்பட்டது குறித்து மக்களுக்கு முறையாக அறிவிப்பு கொடுக்கவில்லை. சந்தையில் காய்கறி வாங்குவதற்காக அதிகாலையிலேயே மக்கள் பலர் வந்தனர். அங்கு கடைகள் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். அவர்களுக்கு போலீசார் விளக்கம் அளித்து அனுப்பி வைத்தனர்.
மளிகை பொருட்களை மக்கள் வாங்க வேண்டும் என்றால் மாவட்ட நிர்வாகம் தொடங்கி உள்ள சேவை மையத்துக்கு தகவல் தெரிவித்து மளிகை பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். அத்துடன், காய்கறி விற்பனைக்காக மாற்று ஏற்பாடாக நகரில் உள்ள 33 வார்டுகளிலும் தள்ளுவண்டிகளிலும், சரக்கு வாகனங்களிலும் காய்கறி விற்பனை செய்யும் பணி நேற்று தொடங்கியது.
Related Tags :
Next Story