ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களால் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் நிரம்பி வழியும் இருசக்கர வாகனங்கள்


ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களால் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் நிரம்பி வழியும் இருசக்கர வாகனங்கள்
x
தினத்தந்தி 6 April 2020 10:00 PM GMT (Updated: 7 April 2020 5:20 AM GMT)

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களால் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிரம்பி வழிகிறது.

மணப்பாறை,

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வாகனங்களில் செல்ல போலீசார் அனுமதி அளித்திருந்தனர். ஆனால் பல இடங்களில் அத்தியாவசிய தேவையின்றி பலரும் இருசக்கர வாகனங்களில் ஊர் சுற்றி வந்தனர். அவர்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

அதுபோல் மணப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பொதுமக்கள் பலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் இருசக்கர வாகனங்களில் வலம்வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை, மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் கண்காணித்து, நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அவ்வாறு அத்தியாவசிய தேவையின்றி இருசக்கர வாகனங்களில் வலம் வந்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதுடன், அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து மணப்பாறை போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வருகிறார்கள். இதில் மணப்பாறை போலீஸ் நிலைய பகுதியில் மட்டும் 630-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி புத்தாநத்தம், வையம்பட்டி, துவரங்குறிச்சி, வளநாடு ஆகிய போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் 400-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மணப்பாறை போலீஸ் நிலைய வளாகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Next Story