திருவெறும்பூர் ஒன்றிய பகுதியில் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொதுமக்கள் வெளியில் நடமாட அனுமதி- ஊராட்சி தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் தகவல்


திருவெறும்பூர் ஒன்றிய பகுதியில் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொதுமக்கள் வெளியில் நடமாட அனுமதி- ஊராட்சி தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் தகவல்
x
தினத்தந்தி 7 April 2020 3:30 AM IST (Updated: 7 April 2020 10:50 AM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொதுமக்கள் வெளியில் நடமாட அனுமதி அட்டை வழங்க ஊராட்சி தலைவர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் போலீசார் தெரிவித்தனர்.

துவாக்குடி,

திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருவெறும்பூர் ஒன்றியத்தை சேர்ந்த 20 ஊராட்சிகளின் தலைவர்களும், போலீசாரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் வெளியில் வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறித்து எடுத்துக்கூறப்பட்டது.

மேலும் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக வாரத்தில் 2 நாட்கள் வெளியில் வருவதற்கு 3 விதமாக, பச்சை, ஊதா, ரோஸ் ஆகிய நிறத்தில் பாஸ்(அனுமதி அட்டை) வழங்க உள்ளார்கள். அதற்கு ஊராட்சிகளில் உள்ளவர்களை 3 பகுதியாக பிரித்து அவர்களுக்கு பாஸ்கள் வழங்கப்படும்.

பச்சை நிற பாஸ் வைத்துள்ளவர்கள் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமையும், ஊதா நிற பாஸ் வைத்துள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையும், ரோஸ் நிற பாஸ் வைத்துள்ளவர்கள் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமையும் வெளியில் வர அனுமதிக்கப்படுவார்கள். ஞாயிற்றுக்கிழமை யாரும் வெளியே வர அனுமதி கிடையாது. பாஸ் வைத்திருப்பவர் ஒருவர் மட்டும் தான் பொருட்கள் வாங்க வெளியே வர வேண்டும்

15 வயது முதல் 60 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே வெளியே வர அனுமதி. காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டும் அனுமதி. அனைத்து பாஸ்களையும் அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் ஊர் பொது மக்கள் அனைவருக்கும் கொடுப்பார்கள். இந்த பாஸ் எடுத்து வருபவர்கள் மட்டுமே வெளியில் வர முடியும். அப்படி வருபவர்கள் அவர்கள் வருவதற்கு உரிய ஆவணங்கள் அனைத்தும் வைத்திருக்க வேண்டும். மேலும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் விளக்கி கூறினார்கள்.

Next Story