ஊரடங்கால் வருவாய் இழப்பை சந்தித்த போதும் விவசாய பணிகளில் ஆர்வம் குறையாத கிராம மக்கள்


ஊரடங்கால் வருவாய் இழப்பை சந்தித்த போதும் விவசாய பணிகளில் ஆர்வம் குறையாத கிராம மக்கள்
x
தினத்தந்தி 6 April 2020 10:00 PM GMT (Updated: 7 April 2020 5:20 AM GMT)

ஊரடங்கால் வருவாய் இழப்பை சந்தித்தபோதும் விவசாய பணிகளில் ஆர்வம் குறையாமல் கறம்பக்குடி பகுதி விவசாயிகள் நடவு, களை பறிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கறம்பக்குடி,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொழில், வியாபாரம், விவசாயம் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தர்ப்பூசணி, வாழை, வெள்ளரி மற்றும் பூக்கள் போன்றவை சந்தைப்படுத்த முடியாததால் வயலிலேயே அழுகி வீணாகி வருகின்றன. இதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் லட்சக்கணக்கில் இழப்பை சந்தித்துள்ளனர்.

மேலும் கடலை, உளுந்து போன்றவை வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் அறுவடை செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கால் கடும் வருவாய் இழப்பை சந்தித்தபோதும் பிரச்சினைகளையே வாழ்க்கை முறையாகி போன விவசாயிகள் என் கடன் பணி செய்து கிடப்பதே என குடும்ப உறுப்பினர்களுடன் மற்ற விவசாய பணிகளில் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர். விவசாய தொழிலாளர்கள் கிடைக்காத நிலையில் பல்வேறு கிராம பகுதிகளில் ஓரிருவராய் நடவு, களை பறிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து எள் செடிகளில் களை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் விவசாயி கூறுகையில், வாழ்க்கையே எங்களுக்கு போராட்டம் தான். இந்த ஆண்டிற்கான வாழ்வாதாரமாக எண்ணியிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான தர்ப்பூசணி எங்கள் வயலிலேயே அழுகி விட்டது. கோடைக்கால அறுவடை பயிர்களான வெள்ளரி, பூசணி என அனைத்தும் ஊரடங்கால் வாங்குவோர் இன்றி வீணாகி விட்டன.

இருப்பினும் விவசாயமே எங்களின் உயிர் மூச்சு. வருவாய் இழப்புகள் எங்களுக்கு புதிதும் அல்ல. ஆகையால் ஒவ்வொரு விவசாயியும் அவர்கள் வயல் வெளிகளில் ஏதேனும் ஒரு விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என கூறினார். விடாமுயற்சி, தளராத நம்பிக்கை, எந்த சவாலையும் எதிர்நோக்கும் திறன் உள்ள இதுபோன்ற விவசாயிகள் இருக்கும் வரை எந்த கொரோனா வைரசையும் நாம் எதிர்நோக்கி வெற்றி பெறலாம். 

Next Story