கொளத்தூர் அருகே, காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
கொளத்தூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
கொளத்தூர்,
கொளத்தூர் போயர் தெருவை சேர்ந்தவர் கனகமூர்த்தி. இவரது மனைவி சிவகாமி. இவர்களது மகன் தனுஷ் (வயது 8). இந்த நிலையில் தனது தாய் மற்றும் தந்தையை இழந்த தனுஷ் பாட்டி ஜெயம்மாள் என்பவரது பராமரிப்பில் இருந்தான். மேலும் கொளத்தூரில் உள்ள நிர்மலா மேல்நிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளித்ததுடன், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் பள்ளி விடுமுறையையொட்டி தனுஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொளத்தூர் அருகே உள்ள பெருமாள் கோவில் நத்தம் காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றான்.
ஆற்றில் அனைவரும் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது தனுஷ் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான். இதைப்பார்த்த சக நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மாணவன் தனுசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story