டெல்லி மாநாட்டிற்கு சென்று கிருஷ்ணகிரி திரும்பியவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்


டெல்லி மாநாட்டிற்கு சென்று கிருஷ்ணகிரி திரும்பியவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 7 April 2020 3:30 AM IST (Updated: 7 April 2020 10:50 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி மாநாட்டிற்கு சென்று கிருஷ்ணகிரி திரும்பியவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி,

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வருகிற 14-ந்தேதி வரை வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து வந்த 634 பேர் அவரவர் வீடுகளில் தனிமையில் வைத்து காண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களில், 244 பேர் 28 நாட்களை கடந்துள்ளனர். இவர்களுக்கு நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. 314 பேர் வீட்டில் தனிமையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல கிருஷ்ணகிரி முகவரி கொடுத்து விட்டு வேறு மாவட்டத்தில் 52 பேர் இருக்கிறார்கள்.

இதைத் தவிர வேறு மாநிலங்களில் இருந்து 1,882 பேரும், வேறு மாவட்டங்களில் இருந்து 556 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அவர்களுக்கும் இதுவரையில் எந்த அறிகுறிகளும் இல்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 30 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்துள்ளனர். இவர்களில் ஒருவர் டெல்லியில் உள்ளார். ஒருவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ளார். மற்ற 28 பேர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளனர். இவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை. நேற்று வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Next Story