பங்குனி உத்திர திருவிழா ரத்து: பக்தர்கள் கூட்டம் இன்றி முருகன் கோவில்கள் வெறிச்சோடின


பங்குனி உத்திர திருவிழா ரத்து: பக்தர்கள் கூட்டம் இன்றி முருகன் கோவில்கள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 6 April 2020 10:45 PM GMT (Updated: 7 April 2020 5:20 AM GMT)

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தர்மபுரி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டதால் முருகன் கோவில்கள் நேற்று வெறிச்சோடின.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக அன்னசாகரம் சிவசுப்பிரமணியசாமி கோவில், கம்பைநல்லூர் சுப்பிரமணியசாமி கோவில் ஆகியவற்றில் பங்குனி உத்திர தினத்தில் தேரோட்டம் நடைபெறும். விழாவையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

இந்த விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்படும். பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளதால் அன்னசாகரம், கம்பைநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள சிவசுப்பிரமணியசாமி கோவில்களில் பங்குனி உத்திர தேரோட்ட விழா ரத்து செய்யப்பட்டது. இதேபோல் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை, பாப்பாரப்பட்டி, நெசவாளர் காலனி, லளிகம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

பங்குனி உத்திர விழா நாளான நேற்று இந்த கோவில்கள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. அன்னசாகரம் சிவசுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் அலங்கரிக்கப்படாத தேர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் கோவில் அர்ச்சகர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இந்த பூஜையில் பக்தர்கள் பங்கேற்கவில்லை.

இதேபோன்று கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதை கட்டுப்படுத்தும் பொருட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர விழா களையிழந்து காணப்பட்டது. கிருஷ்ணகிரியில் பிரசித்தி பெற்ற காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில் காலையில் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் கோவில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

அதே போல மாவட்டத்தில் உள்ள அகரம் முருகன் கோவில், ஓசூர் வேல்முருகன் கோவில், ஜெகதேவி முருகன் கோவில் உள்பட அனைத்து முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர விழா பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கோவில்களுக்கு செல்ல முடியாத நிலையிலும் முருக பக்தர்கள், வீடுகளிலேயே சாமியை வழிபட்டனர். 

Next Story