ஊரடங்கின்போது மதியம் 1 மணிக்கு பிறகு அரசு வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
கோவையில் ஊரடங்கின்போது மதியம் 1 மணிக்கு பிறகு எந்தெந்த அரசு வாகனங்களுக்கு எரிபொருள் வினியோகிக்கப்பட்டது என்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை,
ஊரடங்கின்போது மதியம் 1 மணிக்கு பிறகு பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளதால் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்து விட்டது. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மதியம் 1 மணிக்கு பிறகு மூடப்பட்டாலும் அத்தியாவசிய சேவைகளான ஆம்புலன்ஸ், போலீஸ் ஜீப் மற்றும் அரசு வாகனங்களுக்கு மட்டும் தான் பெட்ரோல், டீசல் வினியோகம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த வாகனங்களின் விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன. எந்த அரசு வாகனத்துக்கு எத்தனை லிட்டர் எரிபொருள் வழங்கப்பட்டது? அந்த துறை அதிகாரிகளின் கையெழுத்து, வாகன பதிவு எண் ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு வாகனங்கள் தவிர மற்ற தனியார் வாகனங்கள் வந்தால் அவற்றுக்கு எரிபொருள் வழங்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் சங்க செயலாளர் எம்.செந்தில்குமார் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் மொத்தம் 240 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன. ஊரடங்கிற்கு முன்பு சராசரியாக ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தினமும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையாகும்.
ஆனால் தற்போது 600 முதல் 750 லிட்டர் தான் விற்பனையாகிறது. ஏறக்குறைய 85 சதவீத எரிபொருள் விற்பனை குறைந்துள்ளது. தற்போது காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை தான் விற்பனை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story