ஊரடங்கால் வியாபாரிகள் வாங்க முன்வரவில்லை: அறுவடை செய்யாததால் கொடியிலேயே அழுகும் பன்னீர் திராட்சை - விவசாயிகள் கவலை
கோவையில் ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் பன்னீர் திராட்சையை வாங்க முன்வரவில்லை. இதனால் அறுவடை செய்யப்படாமல் கொடியிலேயே பன்னீர் திராட்சைகள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் உள்ள தீத்திபாளையம், காளம்பாளையம், குப்பனூர், மாதம்பட்டி, தென்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் 500 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்துள்ளனர். அறுவடை செய்யப்படும் பன்னீர் திராட்சைகளை சிறுவாணி ரோட்டில் உள்ள நேரடி விற்பனை நிலையங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.
கோடை காலத்தை எதிர்நோக்கி சாகுபடி செய்யப்பட்ட பன்னீர் திராட்சைகள், அறுவடைக்கு தயாராக உள்ளன. தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் வியாபாரிகள் பன்னீர் திராட்சைகளை வாங்க வரவில்லை. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் திராட்சை விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படாததால் திராட்சை பழங்கள் கொடியிலேயே அழுகி வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள் கவலை அடைந் துள்ளனர்.
இது குறித்து பன்னீர் திராட்சை சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறியதாவது:- வழக்கமாக கோடை காலத்தில்தான் பன்னீர் திராட்சை வியாபாரம் அமோகமாக இருக்கும். இதனை நம்பி இந்த ஆண்டும் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு இருந்தோம். கொரோனா ஊரடங்கு உத்தரவால் அறுவடையும் செய்ய முடியவில்லை. விற்பனைக்கும் அனுப்பி வைக்கவும் முடியவில்லை. எங்கள் கண்முன்னே அவை அனைத்தும் கொடியிலேயே அழுகும் நிலைக்கு செல்வதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.
காய்கறி கடைகள், பழமுதிர் நிலையங்களில் பன்னீர் திராட்சை விற்பதை அதிகாரிகள் ஊக்கம் அளிக்க வேண்டும். அறுவடை செய்யவும், வெளி ஊர்களுக்கு அனுப்பவும் தோட்டக்கலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story