தஞ்சை மாவட்டத்தில், மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்


தஞ்சை மாவட்டத்தில், மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
x
தினத்தந்தி 6 April 2020 11:00 PM GMT (Updated: 7 April 2020 5:21 AM GMT)

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 42 வயதான சமையல் கலைஞர், மேற்கிந்திய தீவில் பணியாற்றி வந்தார். சொந்த ஊருக்கு திரும்பிய இவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது கடந்த மாதம் 28-ந் தேதி உறுதி செய்யப்பட்டது. இவருக்கு 2-ம் கட்ட பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. 3-ம் கட்டமாக சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக திருவாரூர் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு தஞ்சை மாவட்டத்திற்கு வந்த வெளிநாட்டினர் மற்றும் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களை சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இவர்களில் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற கும்பகோணத்தை சேர்ந்த 3 பேருக்கும், திருவையாறு அருகே மேல திருப்பூந்துருத்தியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த 40 வயதுடையவரும், ஒரத்தநாடு தாலுகா நெய்வாசலை சேர்ந்த 46 வயதுடையவரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள்.

மேலும் ஒருவர் ஊரணிபுரத்தை சேர்ந்த 35 வயதுடையவர். இவர் டெல்லியில், இணையதள செய்தி நிறுவனத்தில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவர் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடந்த மாதம் 24-ந் தேதி வந்தார். அப்போது இவருடன் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களும் பயணம் செய்தனர்.

இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வந்த செய்தியை தொடர்ந்து ஊரணிபுரத்தை சேர்ந்த செய்தியாளர், தனக்கும் கொரோனா தொற்று இருக்கலாமோ? என்ற சந்தேகத்தின் பேரில் தாமாகவே மருத்துவ பரிசோதனைக்கு முன்வந்தார். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு, திருவாரூர் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் இவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது உறுதியானது.

இதனால் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் வசிக்கும் பகுதி முற்றிலும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இவர்களது உறவினர்கள், உடன் இருந்தவர்கள், அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 302 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு, திருவாரூர் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களில் இதுவரை 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 261 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிய ஆய்வக முடிவை டாக்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story