மத்திய அரசு தாராளமாக நிதி வழங்க வேண்டும் - நாராயணசாமி வலியுறுத்தல்
மாநில அரசுக்கு, மத்திய அரசு தாராளமாக நிதியை வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி,
கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு வழிகாட்டுதலின்படி புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் விதமாக சட்ட சபையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் வர்த்தகர்களுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் கந்தசாமி, தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், அரசு துறை செயலாளர்கள் சுர்பிர் சிங், ஆலிஸ் வாஸ், விக்ராந்த் ராஜா, வல்லவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது வர்த்தகர்களிடம், பொதுமக்களுக்கு தடையின்றி பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதிக விலைக்கு விற்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தினார்.
இதையடுத்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா நிவாரண நிதியாக அரசு ஊழியர்கள், பொதுமக்கள் ரூ.5 கோடி வழங்கி உள்ளனர். இதேபோல் மத்திய அரசு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் தாராளமாக நிதி வழங்க வேண்டும். இந்த நிதியை கொண்டு மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு உடைகள் வாங்கப்படும்.
மத்திய அரசானது பேரிடர் நிதியில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு நிதி வழங்கி உள்ளது. ஆனால் புதுவை மாநிலத்துக்கு இதுவரை தேவையான நிதி வழங்கவில்லை. இடைக்கால நிவாரணமாக ரூ.300 கோடி, மொத்தமாக ரூ.995 கோடி நிதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் இதுவரை பதில் வரவில்லை.
புதுவை மக்களுக்கு நிவாரணமாக மாநில அரசின் நிதியில் இருந்து ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கியுள்ளோம். சரக்கு மற்றும் சேவை வரியில் புதுச்சேரியின் பங்கு ரூ.200 கோடி, மானிய நிதியை மத்திய அரசு தரவில்லை. 130 கோடி மக்களில் 110 கோடி பேர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிட மத்திய அரசு தாராளமாக நிதி வழங்க வேண்டும். உத்தரவுகளை நிறைவேற்றிட தேவையான வசதிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தான் செய்து தரவேண்டும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமக்கு இன்னும் மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்கவில்லை. வர்த்தக நிறுவனங்கள் மூடி இருப்பதால் புதுவை அரசுக்கு வர வேண்டிய வருமானமும் வரவில்லை. அரசு ஊழியர்களின் சம்பளம், திட்டங்களை நிறைவேற்ற வேண்டி உள்ளதால் மத்திய அரசு ரூ.995 கோடி வழங்க கோரி மீண்டும் கடிதம் எழுத உள்ளேன். இனிவரும் காலம் இக்கட்டான காலம். மாநில அரசால் எல்லாவற்றையும் ஏற்க முடியாது. எனவே மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
Related Tags :
Next Story