வேலூர் அருகே, பெயிண்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்


வேலூர் அருகே, பெயிண்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்
x
தினத்தந்தி 7 April 2020 5:39 AM GMT (Updated: 7 April 2020 5:39 AM GMT)

வேலூர் அருகே ஊரடங்கு நேரத்தில் பெயிண்டரை ரவுடி கும்பல் சரமாரியாக அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூர்,

வேலூர் தோட்டபாளையம் சோளாபுரிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக் (வயது 26). பெயிண்டர். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ். ஆட்டோ டிரைவர். இவர்கள் இருவரும் வேலூர் அருகே உள்ள அரியூர் அருகே திருட்டுத்தனமாக விற்பனையாகும் சாராயத்தை குடிப்பதற்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை சந்திக்க சென்றனர். அந்த நபருக்கும், அசோக் தரப்புக்கும் பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இது குறித்து அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறுக்கு பின்னர் அந்த நபர் தனது தரப்பை சேர்ந்தவர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் அசோக் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் அழைத்து பேசினர்.

அப்போது அசோக் தரப்பினருக்கும், எதிர் தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த அந்த தரப்பினர் அசோக்கை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அசோக் சுருண்டு விழவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

ஊரடங்கு காரணமாக அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லை. இதனால் படுகாயத்துடன் சுய நினைவை இழந்து கிடந்த அவரை ஜெயப்பிரகாஷ் மற்றும் காமேஷ் ஆகியோர் மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர வைத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அவ்வாறு வரும்போது அசோக்கின் கால்கள் சாலையில் உராய்ந்தபடியே இருந்தது.

இந்த நிலையில் மருத்துவமனையில் அசோக்கை பரிசோதனை செய்த டாக்டர்கள் அசோக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அரியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தை வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “அசோக் தரப்பினர் சாராயம் குடிப்பதற்காக அரியூர் சென்றதாக தெரிகிறது. அங்கு ஏற்பட்ட தகராறில் அசோக் தாக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். அவரை தாக்கிய கும்பல் அரியூர் பகுதியை சேர்ந்த 5 பேர் என்பதும் அவர்கள் ரவுடிகள் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ரவுடி கும்பலை பிடித்த பின்னரே கொலைக்கான முழு காரணமும் வெளிவரும். குற்றவாளிகளை தேடி வருகிறோம்” என்றனர்.

தற்போது ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டதால் மது அருந்த முடியாமல் குடிமகன்கள் தவித்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி வேலூர் அருகே உள்ள மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்கப்படுகிறது. அதனை ஏராளமானோர் சென்று குடித்து வருகின்றனர். இதனை கண்டித்தவர்களை சாராய கும்பல் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் கடந்த 5 தினங்களுக்கு முன்பு நடந்தது. ஆனால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் பிடிக்கவில்லை. மாறாக சாராயம் குடிக்க சென்றவர்களைத்தான் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் சாராயம் குடிக்க சென்ற அசோக்கை ரவுடி கும்பல் கொலை செய்து விட்டு தப்பியுள்ளது. எனவே இந்த சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story