நெல்லை மாநகர பகுதியில் அனுமதி இல்லாமல் காய்கறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - ஆணையாளர் கண்ணன் எச்சரிக்கை
நெல்லை மாநகர பகுதியில் அனுமதி இல்லாமல் வாகனங்கள் மூலம் தெருவில் சென்று காய்கறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை,
இந்தியாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலை முற்றிலும் தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக தினசரி சந்தைகளில் காய்கறிகள் விற்பனையின் போது, பொதுமக்கள் அதிகமாக கூட்டம் கூடுவதை தடுக்கும் பொருட்டு, உழவர் சந்தைகள் மற்றும் மாநகராட்சி, தினசரி காய்கறி சந்தைகளையும் பரவலாக அமைத்து நெல்லை மாநகரத்தில் மாற்று இடங்களை தேர்வு செய்து தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், மாநகரின் வெவ்வேறு பகுதிகளில் காய்கறிகளை எடுத்துச்சென்று நடமாடும் வாகனங்களின் மூலம் விற்பனை செய்வதற்கு ஏதுவாக, காய்கனி விற்பனை செய்ய முன்வரும் நபர்கள் அதற்கான வாகன எண், வாகன ஓட்டுநர் பெயர், கைபேசி எண் மற்றும் ஆதார் எண் போன்ற விவரங்களுடன் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட எந்த பகுதியில் விற்பனை செய்ய வேண்டும்? என்ற விவரத்துடன் ஆணையாளரிடம் முன்அனுமதி பெற வேண்டும். அவ்வாறு முன் அனுமதி பெற்ற வாகனத்தில், நடமாடும் காய்கறி விற்பனை வண்டி என்ற வாசகத்துடன் மட்டுமே காய்கனிகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும்.
அவ்வாறு மாநகராட்சி ஆணையாளரின் அனுமதியின்றி, நடமாடும் காய்கனி கடைகள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்பட்டால் அந்த வண்டிகள் மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்படும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story