கீழமாசி வீதியில் விற்பனை கூடாது: அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை - வியாபாரிகளுக்கு, கலெக்டர் எச்சரிக்கை


கீழமாசி வீதியில் விற்பனை கூடாது: அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை - வியாபாரிகளுக்கு, கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 April 2020 4:00 AM IST (Updated: 8 April 2020 3:00 AM IST)
t-max-icont-min-icon

அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு, கலெக்டர் வினய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை, 

கொரோனா நோய் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விசாகன் முன்னிலை வகித்தார். கலெக்டர் வினய் தலைமை தாங்கி பேசினார். இதில் தொழில் வர்த்தக சங்கத்தினர், தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனர்கள், மருத்துவ வல்லுனர்கள், மருந்து தயாரிப்பாளர்கள், வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் ஆகிய துறைகளின் அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த முகவர்கள், உணவுத் தயாரிப்பாளர்கள், அதன் வினியோகஸ்தர்கள், அரசு சாரா அமைப்பினர், நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

மதுரை மாநகரில் உள்ள மொத்த வியாபார நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகம் அறிவித்த நேரத்தில் தான் வெளியூரில் இருந்து வரும் அத்தியாவசிய பொருட்களை இறக்கவேண்டும்.

அதனை சில்லரை வியாபாரிகளுக்கு விற்கும்போது கூட்டத்தை கூட்டாமல் போதிய சமூக இடைவெளி விட்டு மாவட்ட நிர்வாகம் அறிவித்த நேரத்தில் மட்டுமே பொருட்களை கொடுக்க வேண்டும். கீழமாசிவீதியில் உள்ள கடைகள் பொதுமக்களுக்கு மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை செய்யக்கூடாது. தவிர்க்க முடியாமல் பொதுமக்களுக்கு மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை செய்ய வேண்டி இருந்தால் அவர்களின் வீட்டிற்கே சென்று கொடுக்க வேண்டும்.

அனைத்து மொத்த வியாபார நிறுவனங்களிலும் பொருட்களின் விலை பட்டியல் அனைவருக்கும் தெரியும்படி வைக்க வேண்டும். மொத்த வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைக்க கூடாது. அதிக விலைக்கு விற்ககூடாது. விதிமுறைகளை பின்பற்றி விற்பனை செய்ய வேண்டும். விதிகளை மீறினால் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் தடைசட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொருட்களை விற்பவர்கள், வாங்குபவர்கள், விற்பனையாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆகியோர் கண்டிப்பாக முக கவசம் மற்றும் பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும். கைகளை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கழுவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் போலீஸ் துணை கமிஷனர் கார்த்திக், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சுப்பிரமணியன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் பிரியாராஜ், வேளாண்மை துறை உதவி இயக்குனர் விவேகானந்தன், உணவு பாதுகாப்பு அலுவலர் சோமசுந்தரம், மீன் வளத்துறை உதவி இயக்குனர் ஜெயக்குமார், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன், அரிசி, தானியங்கள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயபிரகாசம், ஓட்டல்கள் சங்க தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story