வரத்து அதிகரிப்பால் சென்னையில் வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி - கிலோ ரூ.12-க்கு விற்பனை
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பால் வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.12-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெங்காயம் வரத்து அதிகமாக இருப்பதால் கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சத்தை தொட்ட வெங்காயத்தின் விலை தற்போது அதே அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதாவது மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.160 வரையும், சில்லரை விலையில் ரூ.200-க்கு அதிகமாகவும் விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் தற்போது மொத்த விலையாக ஒரு கிலோ ரூ.12-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் ஆலோசகர் சவுந்தரராஜன் தெரிவித்ததாவது:-
வெங்காயம் அத்தியாவசிய பொருள் என்பதால் வெளிமாநிலங்களில் இருந்து கோயம்பேடுக்கு வரும் வெங்காய லாரிகளின் எண்ணிக்கை குறையவில்லை. ஆந்திரா மற்றும் மராட்டிய மாநிலங்களில் இருந்து வெங்காய வரத்து அதிகரித்து உள்ளதால் வெங்காயத்தின் விலை மிகவும் குறைந்து உள்ளது.
50 கிலோ கொண்ட வெங்காய மூட்டை ஒன்று ரூ.600-க்கு (கிலோ ரூ.12) விற்பனை செய்யப்படுகிறது. 50 கிலோ எடை உள்ள நாசிக் வெங்காயம் ரூ.900-க்கு (கிலோ ரூ.18) விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று வேளாண் விளைபொருட்களான காய்கறிகளும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருவதற்கு தடை ஏதும் இல்லை. அதே நேரத்தில் இங்கு இருந்து பிற மாவட்டங்களில் அனுப்பப்படும் காய்கறிகள் அங்கு மார்க்கெட்டில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மற்ற காய்கறிகளின் விலை
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் கிலோ அளவில் மொத்தவிலை பின்வருமாறு விற்கப்படுகிறது. சாம்பார் வெங்காயம் ரூ.70, உருளைக்கிழங்கு ரூ.25, சேனைக்கிழங்கு ரூ.25, சேப்பங்கிழங்கு ரூ.40, முட்டைகோஸ் ரூ.10, பீன்ஸ் ரூ.60-ரூ.70, கேரட் ரூ.25, சவ்சவ் ரூ.20, நூக்கோல் ரூ.20, பீட்ரூட் ரூ.20, காலிபிளவர் ரூ.20, பச்சை பட்டாணி ரூ.20, நாட்டு தக்காளி ரூ.15, நவீன் தக்காளி ரூ.20, முருங்கைக்காய் ரூ.20 (கடந்த மாதம் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது), கத்திரிக்காய் ரூ.20, வெண்டைக்காய் ரூ.25, பாகற்காய் ரூ.30, கொத்தவரைக்காய் ரூ.25, பச்சை மிளகாய் ரூ.20 மற்றும் வாழைக்காய் (ஒரு எண்ணம்) ரூ.6-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பூண்டு ரூ.90
இதே போன்று, கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மளிகை பொருட்கள் மொத்த வியாபாரி மாரிமுத்து மளிகை பொருட்கள் விலை குறித்து (கிலோவுக்கு) கூறும்போது, “உருட்டு உளுந்து ரூ.110, துவரம் பருப்பு ரூ.98 முதல் ரூ.102, சிறு பயத்தம் பருப்பு ரூ.115 முதல் ரூ.118, கடலை பருப்பு ரூ.60 முதல் ரூ.65, கடுகு ரூ.58, வெந்தயம் ரூ.65, பாசி பருப்பு ரூ.100, பட்டாணி ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது” என்றார்.
இதேபோன்று, கொத்தவால் சாவடியைச் சேர்ந்த சென்னை மிளகாய் வியாபாரிகள் சங்க தலைவர் பி.கோதண்ட ராமையா கூறும்போது, “பூண்டு கிலோ ரூ.90 முதல் ரூ.130 வரையும், வத்தல் ரூ.100 முதல் ரூ.140 வரையும், குண்டு வத்தல் ரூ.130 முதல் ரூ.170 வரையும், கொத்தமல்லி கிலோ ரூ.95-க்கும், புளி கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது” என்றும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story