கொரோனா செயலியை 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர் - சென்னை மாநகராட்சி கமிஷனர் பேட்டி


கொரோனா செயலியை 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர் - சென்னை மாநகராட்சி கமிஷனர் பேட்டி
x
தினத்தந்தி 7 April 2020 10:30 PM GMT (Updated: 7 April 2020 9:47 PM GMT)

கொரோனா செயலியை ஒரு லட்சம் பேர் இதுவரை பதிவிறக்கம் செய்துள்ளனர் என சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறினார்.

திருவொற்றியூர், 

சென்னை மாநகராட்சி சார்பில் வீடுகளுக்கு நேரடியாக சென்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது. திருவொற்றியூர் சன்னதி தெருவில் நடைபெற்ற இந்த பணிகளை நேற்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஆய்வு செய்தார்.

அதே பகுதியில் வடமாநிலத்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபத்திலும் அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா நோய் தொற்று குறித்து வீடுகள் மற்றும் குடும்பங்களின் எண்ணிக்கை அடிப்படையில் கண்காணிக்க சென்னை 15,000 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நபர் என்ற அடிப்படையில் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. சென்னையில் 18 லட்சம் குடும்பங்கள் உள்ளனர். மாநகராட்சி அலுவலர்கள் தினமும் வீடுகளில் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். ஏதாவது அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவர் கண்காணிப்பில் ஈடுபடுவர். ஏதாவது ஒரு பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யும் பட்சத்தில் அப்பகுதியில் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்படும்.

சென்னையில் இதுவரை 40 இடங்களில் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ள மக்கள் பாதுகாப்பு பகுதி எல்லை வரை மட்டுமே வரமுடியும். சமூக இடைவெளியை பின்பற்றுவது மக்களின் கடமை. அடிப்படை பொருட்களுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. தேவையின்றி கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். மொத்த வியாபாரத்துக்கு எந்த தடையும் இல்லை.

கோடம்பாக்கம் டாக்டருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் தகவல்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகிறது. டெல்லிக்கு சென்றவர்களுடைய தகவல்கள் தனித்தனியாக திரட்டப்பட்டு வருகிறது. பீனிக்ஸ் மாலை பொறுத்தவரை கொரோனா அறிகுறிகள் யாரிடமும் இதுவரை கண்டறியப்படவில்லை.

ஒரு லட்சம் பேர் கொரோனா செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். 10 லட்சம் பேர் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். பொதுமக்கள் செயலியை பதிவிறக்கம் செய்ய முன்வர வேண்டும். சென்னையில் வீட்டு தனிமையில் உள்ளவர்களில் 13 ஆயிரம் பேர் தனிமைப்படுத்திய காலம் நிறைவு பெற்றுள்ளது. பாதுகாப்புக்காக தான் கொரோனா உறுதி செய்யப்பட்ட பகுதிகள் அடைக்கப்பட்டுள்ளது. மக்கள் பீதி அடைய வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் திருவொற்றியூர் மண்டல உதவி ஆணையர் பால் தங்கதுரை, சுகாதார அதிகாரி இளஞ்செழியன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story