வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெயிலில் இருந்து விலங்குகள் தப்பிக்க சிறப்பு ஏற்பாடு
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், கோடை வெயிலில் இருந்து தப்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி யானை, மனித குரங்குகள் ஷவரில் குளித்து வருகின்றன.
வண்டலூர்,
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாட்டி வதைக்கும் கோடை வெயிலை விலங்குகள் சமாளிக்கும் வகையில் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி பூங்காவில் உள்ள மனித குரங்கு வசிக்கும் இருப்பிடத்தில் குடை வடிவில் ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து உச்சி வெயில் நேரத்தில் கொட்டும் குளிர்ந்த நீரில் கூண்டில் இருந்து வெளிவரும் மனித குரங்குகள் ஆனந்த குளியில் போட்டு தங்களது உடல் சூட்டை தணித்துக்கொள்கின்றன. அத்துடன் மனித குரங்குகளுக்கு தர்பூசணி, ஆரஞ்சு, கொய்யா, வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள் உண்பதற்கு தரப்படுகிறது. இதனை மனித குரங்குகள் ருசித்து சாப்பிடுகின்றன. மனித குரங்களின் உடல் வெப்பத்தை தணிப்பதற்காக லஸ்ஸியும் தரப்படுகிறது. இதனால் பூங்காவில் மனித குரங்குகள் மகிழ்ச்சியில் குதிக்கின்றன.
ஷவரில் குளிக்கும் யானை
இதேபோல பூங்காவில் உள்ள யானைகளும் ஷவரில் குளித்து மகிழ்கின்றன. பூங்கா ஊழியர்கள் வாளியின் மூலமும் தண்ணீரை வாரி யானையின் மீது ஊற்றுகின்றனர். யானைகளுக்கு குளுகுளு தர்பீஸ் பழங்கள் மற்றும் இளநீரை ஊழியர்கள் தருகின்றனர். இதனை யானைகள் விரும்பி சாப்பிடுகின்றன.
வெள்ளைப்புலி கூண்டில் ராட்சத பேன் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளைப்புலி கூண்டு எப்போதும் குளுகுளு என்று இருப்பதால் வெள்ளைப்புலிகள் ஒய்யாரமாக கூண்டில் ஒய்வு எடுக்கின்றன. வெள்ளைப்புலிகள் இருக்கும் இடத்தில் சிறிய குளம்போல் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு அதில் தண்ணீர் விடப்பட்டுள்ளது. தாய்ப்புலி மற்றும் அதனுடைய புலிக்குட்டிகள் தங்களை வெப்பத்தில் இருந்து காத்துகொள்வதற்காக அடிக்கடி இந்த சிறிய தண்ணீர் தொட்டியில் குளித்து விளையாடுகின்றன. வெள்ளைப்புலியின் கூண்டு அருகே ஒரு ஷவரும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஷவரில் வெயில் நேரத்தில் வெள்ளைப்புலிகள் குளித்து விளையாடுகின்றன.
ரசித்து பார்க்க ஆள் இல்லை
இதேபோல காண்டாமிருகம் இருப்பிடத்திலும் ஷவர் அமைக்கப்பட்டு உள்ளது. பறவைகள் அடைக்கப்பட்டு உள்ள கூண்டுகளுக்கு மேல் கோணி பைகள் போடப்பட்டு அதன் மீது ஊழியர்கள் காலை, மதியம் மற்றும் மாலை நேரங் களில் குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கின்றனர். இதனால் பறவைகள் கூண்டு எப்போதும் குளிர்ச்சியாக காணப்படுகிறது.
சிறு கரடிகள் இருப்பிடத்தில் மரங்களிலிருந்து கீழே தொங்கும் வகையில் மண் பானைகளில் தேன் நிரப்பி துளைகள் இட்டு கீழே தேன் சொட்டும் வகையில் தொங்கவிடப்பட்டுள்ளது. அதில் இருந்து சொட்டும் தேன் துளிகளை சிறு கரடிகள் ருசித்து பருகி வருகிறது.
நெருப்பு கோழி கூண்டிலும் ‘ஸ்பிரிங்க்லர்ஸ்’ வைக்கப்பட்டு நாலாபுறமும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இதனால் நெருப்பு கோழிகள் கூண்டு குளுகுளு என்று உள்ளது. பூங்காவில் பல்வேறு விலங்குகள் கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க பூங்கா நிர்வாகம் பல ஏற்பாடுகளை செய்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் பூங்கா மூடப்பட்டு உள்ளதால் பூங்காவில் உள்ள மனித குரங்கு, காண்டாமிருகம், யானை, வெள்ளப்புலிகள் ஆகிய விலங்குகள் ஷவரில் குளிக்கும் காட்சிகளை ரசித்து பார்க்கத்தான் ஆள் இல்லை.
இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கிருமிநாசினி
கொரோனா வைரஸ் காரணமாக பூங்கா முழுவதும் அடிக்கடி கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. நேற்று அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் ஒரு புலிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால்
இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களின் ஆணையம் பல்வேறு அறிவுரைகளை உயிரியல் பூங்காவிற்கு வழங்கி உள்ளது. அதன்படி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு வழங்கப்படும் உணவுகள் அனைத்தும் பல்வேறு சோதனைகளை செய்த பிறகுதான் விலங்குகளுக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story