நடமாடும் காய்கறி அங்காடி - கலெக்டர் தொடங்கி வைத்தார்


நடமாடும் காய்கறி அங்காடி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 April 2020 4:00 AM IST (Updated: 8 April 2020 3:23 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் நடமாடும் காய்கறி அங்காடியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் பகுதியில் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக நேற்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ராமேசுவரம் வருகை தந்தார். அங்கு அவர் நகராட்சி மூலம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள நடமாடும் காய்கறி அங்காடி விற்பனையை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து ரேஷன் கடையில் மக்களுக்கு பொருட்கள் வழங்குவதை பார்வையிட்டதுடன் கடை முன்பு நின்ற மக்களிடம் சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அதன் பின்னர் நகராட்சியின் மூலம் செயல்படும் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் மதிய உணவை ஆதரவற்றோருக்கு வழங்கினார்.

அப்போது கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது:- மக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம். ராமேசுவரம் பகுதி மக்களின் வசதிக்காகவே நகராட்சி மூலம் நடமாடும் காய்கறி அங்காடி தொடங்கப்பட்டு உள்ளது. சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் அடங்கிய பை ரூ.100-க்கு விற்பனை செய்யப்படும்.

ராமேசுவரத்தின் அனைத்து பகுதிக்கும் நகராட்சி காய்கறி அங்காடியானது மக்கள் வசிக்கும் வீட்டு வாசலுக்கே வந்து வழங்கும்.இந்த நடமாடும் காய்கறி அங்காடியில் மக்கள் காய்கறிகளை பெற்று கொள்ளலாம். கீழக்கரையில் கொரோனாவால் இறந்தோரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்களும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களும் 14 நாட்கள் தனிமையில் தங்க அறிவுறுத்தப்பட்டு அனைவரும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, நகராட்சியின் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர் பல இடங்களில் தங்க வைக்கப்பட்டு ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடியில் உள்ள அம்மா உணவகம் மூலம் அனைவருக்கும் 3 வேளையும் இலவசமாக உணவும் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது துணை கலெக்டர் மணிமாறன்,நகராட்சி ஆணையாளர் ராமர், தாசில்தார் அப்துல்ஜபார்,நகராட்சி பொறியாளர் சக்திவேல்,சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story