மராட்டியம் தொடர்ந்து முதலிடம்: கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது - மும்பையில் ஒரே நாளில் 116 பேருக்கு பாதிப்பு


மராட்டியம் தொடர்ந்து முதலிடம்: கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது - மும்பையில் ஒரே நாளில் 116 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 8 April 2020 4:45 AM IST (Updated: 8 April 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1000-ஐ தாண்டி உள்ளது. மும்பையில் ஒரேநாளில் 116 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

மும்பை, 

மராட்டிய மாநிலத்துக்கு ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. இங்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் சிவ்போஜன் உணவகத்தில் மேலும் 3 மாதங்களுக்கு 5 ரூபாய்க்கு உணவு வழங்குவது போன்ற பல முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் 150 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,018 ஆக உயர்ந்து உள்ளது.

இதன் மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் நாட்டில் தொடர்ந்து முதலாவது இடத்தில் மராட்டியம் உள்ளது.

மராட்டியத்தில் புதிதாக பாதிக்கப்பட்ட நோயாளிகளில் அதிகப்பட்சமாக மும்பையை சேர்ந்தவர்கள் 116 பேர் ஆவர். புனேயில் 18 பேருக்கும், அகமதுநகரில் 3 பேருக்கும், புல்தானாவில் 2 பேருக்கும், தானேயில் 2 பேருக்கும், நாக்பூரில் 3 பேருக்கும், அவுரங்காபாத்தில் 3 பேருக்கும், சத்தாரா, ரத்னகிரி, சாங்கிலியில் தலா ஒருவருக்கு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

மாநில தலைநகரான மும்பையில் நேற்று ஒரே நாளில் 116 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதன் மூலம் இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 606 ஆக அதிகரித்து உள்ளது.

இதேபோல மும்பையில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 6 பேர் பலியானார்கள். இதன் மூலம் மும்பையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்து உள்ளது.

இதேபோல மும்பையில் இதுவரை 59 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.

Next Story