கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? அரியலூர் கலெக்டர் விளக்கம்
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீட்டில் உள்ளவர்கள் என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரியலூர் கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த 2 ஆயிரத்து 22 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக்குழுவினரால் கண்காணிப்பட்டு வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு மருத்துவக்குழுவினர் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர்.
அதில் குறிப்பிட்டுள்ளவாறு, வீட்டில் உள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. மேலும், வீட்டிற்குள்ளும் அங்குமிங்கும் செல்லாமல் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையிலேயே இருக்க வேண்டும். வீட்டில் ஒரு குறிப்பிட்ட நபர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும். பராமரிப்பு பணி செய்பவர் தவறாமல் முக கவசமும், கையுறையும் அணிந்திருக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.
தனிமைப்படுத்தப்பட்டவரின் உடைகள், படுக்கை விரிப்பு போன்றவற்றை உதறாமல், முக கவசம் மற்றும் கையுறை அணிந்து அதனை எடுத்து தனியாக சோப்பு நீரில் ஊறவைத்து துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும். முக கவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை கழற்றிய பின் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும். வீட்டில் வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டவருடன் எவ்வித தொடர்பும் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்டவருக்கு காய்ச்சல், சளி, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக 104 அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 120 555550-க்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். மேலும், அருகில் உள்ள அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களையும் அடுத்த 28 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும். வீட்டை தினமும் 3 முறையாவது கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். இவையனைத்தும் ஒவ்வொருவரின் நலன் பேணுவதற்கான அரசின் அறிவுறுத்தல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story