வேலூரில், கொரோனா பாதித்த இடங்களை சுற்றி எல்லை குறியீடு
வேலூரில் கொரோனா பாதித்த இடங்களை சுற்றி எல்லை குறியீடு வரையும் பணி தொடங்கி உள்ளது.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்து வரும் காட்பாடி, சின்னஅல்லாபுரம், ஆர்.என்.பாளையம், முள்ளிப்பாளையம், கருகம்புத்தூர் ஆகிய பகுதிகளில் கணக்கெடுப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி அப்பகுதிகளில் 60 ஆயிரத்து 761 வீடுகளில் வசிக்கும் 2 லட்சத்து 42 ஆயிரத்து 197 பேர் விசாரிக்கப்பட்டு, 818 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சுற்றியுள்ள சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தின் மேலும் ஒரு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியை சுற்றி 3 கிலோ மீட்டர் சுற்றளவை கணக்கிட்டு அப்பகுதி மக்கள் எண்ணிக்கை குறித்த தகவல்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அப்பகுதிகளை சுற்றி 3 கிலோ மீட்டர் சுற்றளவில் எல்லைகள் வரையறுக்கப்பட்டு அங்கு சாலைகளில் அதற்கான குறியீடு வரையும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ஆர்.என்.பாளையம், கஸ்பா, சின்னஅல்லாபுரம் ஆகிய பகுதிகளை ஒரு மண்டலமாக உருவாக்கி கோட்டை சுற்றுச்சாலை உள்ளிட்ட எல்லை பகுதிகளில் குறியீடுகள் வரையப்பட்டுள்ளது.
இதையடுத்து முள்ளிபாளையம், காட்பாடி பகுதிகளிலும் இப்பணி நடைபெறும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story