மேற்கு மண்டலத்தில் கொரோனா குறித்து வதந்தி பரப்பிய 20 பேர் மீது வழக்கு - ஐ.ஜி. பெரியய்யா தகவல்
மேற்கு மண்டலத்தில் கொரோனா குறித்து வதந்தி பரப்பிய 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக ஐ.ஜி. பெரியய்யா கூறினார். கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா கோவை-அவினாசி நெடுஞ்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை,
கோவை-திருப்பூர் மாவட்ட எல்லையான காரணம்பேட்டையில் வாகன சோதனையில் போலீசார் சமூக இடைவெளி பின்பற்றுகிறார்களா என்றும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், அவர்கள் விதிமுறைகளை பின்பற்றி செயல்படுவது தெரியவந்தது. மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 8 மாவட்டங்களில் மார்க்கெட் உள்பட மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க போலீசார் தகுந்த ஏற்பாடு செய்து வருகிறார்கள். வயதானவர்களுக்கு தேவையான மருந்துகள், உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை போலீசார் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி வருகிறார்கள்.
வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படுகிறதா? என்றும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 8 மாவட்டங்களில் ஊரடங்கின்போது அவசியமின்றி சுற்றி திரிந்தவர்கள் மீது இதுவரை 18 ஆயிரத்து 909 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 20 ஆயிரத்து 726 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 14 ஆயிரத்து 960 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 3 ஆயிரத்து 998 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 4 ஆயிரத்து 547 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 3 ஆயிரத்து 791 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 1,330 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 1,030 பேர் கைது செய்யப்பட்டனர். 497 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
வாட்ஸ்-அப் மற்றும் முகநூல் உள்பட சமூக வலைதளங்கள் மூலம் கொரோனா குறித்து வதந்தி பரப்பிய 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் 3 வழக்குகளும், நீலகிரி மாவட்டத்தில் 4 வழக்குகளும் பதிவாகி உள்ளன.
ஊரடங்கின்போது வாகனங்களில் அவசியமின்றி சாலைகளில் சுற்றித்திரிந்தாலோ, கூட்டமாக கூடியிருந்தாலோ, விளையாடினாலோ, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே ஊரடங்கின்போது பொதுமக்கள் வீடுகளில் இருந்து போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து கொரோனா பரவலை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story