ஊட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை
ஊட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.
ஊட்டி,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி. காந்தி விளையாட்டு மைதானம், மத்திய பஸ் நிலையம் ஆகிய 2 இடங்களில் திறந்தவெளி சந்தைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு காய்கறிகள், பழங்கள், மளிகை கடைகள் செயல்படுவதால் தினமும் குப்பைகள் சேகரமாகிறது. இதை நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.
ஊட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அன்றாடம் வார்டு, வார்டாக வாகனங்களில் சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தூய்மை பணியாளர்கள் முகக்கவசம், கையுறைகளை அணிந்து குப்பைகளை அகற்றுவது, கிருமிநாசினி தெளிப்பது போன்ற பணிகளில் நேரம் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தனிமைப்படுத்தப்பட்டு உள்ள ஊட்டி காந்தலில் இருந்து தூய்மை பணியாளர்கள் தினமும் நகருக்கு பணிக்கு வந்து விட்டு திரும்புகிறார்கள்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. ஊட்டி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் மருத்துவ பரிசோதனை நேற்று நடந்தது. இதற்காக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதனை தொடர்ந்து 10, 10 பேராக உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வெளி நோயாளி சீட்டு பெற்ற பின்னர் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது.
அதன் பிறகு 3 டாக்டர்கள் தனித்தனியாக பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். சளி, இருமல், மூச்சுத்திணறல், தொண்டை வலி, காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என்று கேட்டனர். அதற்கேற்ப அவர்கள் பதில் அளித்தனர். தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சளி, இருமல் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளை பெற பரிந்துரை செய்யப்பட்டது. பின்னர் நடமாடும் மருத்துவ வாகனத்தில் மருந்து, மாத்திரைகளை பெற்று சென்றனர். நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மொத்தம் 316 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் ஊட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் போலீசாருக்கும், கலெக்டர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது.
Related Tags :
Next Story