ஊரடங்கு உத்தரவு: கடலுக்குள் செல்ல முடியாததால் கடற்கரையோரங்களில், மீன் பிடிக்கும் மீனவர்கள்
ஊரடங்கு உத்தரவு காரணமாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல முடியாததால் சீர்காழி பகுதியில் மீனவர்கள், கடற்கரையோரங்களில் மீன்களை பிடித்து வருகின்றனர்.
திருவெண்காடு,
நாகை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் பூம்புகார், வாணகிரி, திருமுல்லைவாசல், பழையாறு உள்ளிட்ட 18 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதியில் இருந்து வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதனால் விசைப்படகு மற்றும் பைபர் படகு, கட்டுமரங்களில் மீன்பிடிக்க செல்லாமல் கடந்த 15 நாட்களாக மீனவர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மீனவர்களின் அன்றாட உணவில் மீன்கள் முக்கிய இடம் பிடிக்கும். இந்த நிலையில் கடலுக்குள் செல்லாததால் இந்த கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடற்கரையோரத்தில் இருக்கும் மீன்களை பிடித்து வருகின்றனர். பின்னர் அந்த மீன்களை, அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து உணவு சமைத்து சாப்பிடுகின்றனர்.
இதுகுறித்து வாணகிரி மீனவர் ராமன் கூறுகையில், கொரோனா வைரஸ் ஊரடங்கால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர். இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நாங்கள் சைவ உணவு சாப்பிட்டு வருகிறோம். எங்களது அன்றாட உணவில் மீன்களை சாப்பிட்டு பழக்கப்பட்டு விட்டோம். இதனால் எங்களால் மீன் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை.
இதன் காரணமாக எங்கள் பயன்பாட்டுக்கு மட்டும் கடற்கரையோரம் உள்ள மீன்களை பிடித்து சமைத்து சாப்பிட்டு வருகிறோம். கடற்கரையோரம் மீன்களை பிடிக்கும் பணியில் மீனவ இளைஞர்கள் மட்டும் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
Related Tags :
Next Story