நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பகுதிகளை கண்டறிய புதிய செயலி விரைவில் அறிமுகம் - கலெக்டர் ஷில்பா தகவல்


நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பகுதிகளை கண்டறிய புதிய செயலி விரைவில் அறிமுகம் - கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 9 April 2020 4:15 AM IST (Updated: 9 April 2020 12:23 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை பொதுமக்கள் கண்டறியும் வகையில் புதிய செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கலெக்டர் ஷில்பா தெரிவித்தார். இதுகுறித்து அவர், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை ,

நெல்லை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு முதல் முதலில் துபாயில் இருந்து வந்த ராதாபுரத்தை சேர்ந்த 43 வயது மதிக்கதக்க ஒருவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவர் இன்று (அதாவது நேற்று) வீடு திரும்பினார். அவர் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 36 பேரும், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 42 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களின் குடும்பத்தை சேர்ந்த 171 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுடைய ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 83 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மீதி உள்ளவர்களுக்கும் விரைவில் பரிசோதனை செய்யப்படும்.

உணவு ஏற்பாடு

வெளி மாநிலத்தை சேர்ந்த 5 ஆயிரத்து 361 தொழிலாளர்கள் நெல்லை மாவட்டத்தில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அந்தந்த நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆதரவற்ற நிலையில் உள்ள 267 பேர் காப்பகங்களில் சேர்க்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் 428 பேருக்கு நெல்லை தாசில்தார் மூலமும், 86 திருநங்கைகளுக்கு சமூக நலத்துறை மூலமும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மாத்திரைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாநகர பகுதியில் வீதியில் சுற்றி திரிந்த ஆதரவற்றவர்கள் 32 பேர் காப்பகங்களில் சேர்க்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

புதிய செயலி அறிமுகம்

நெல்லை மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி இதுவரை ரூ.14 லட்சம் கிடைத்துள்ளது. கொரோனா நோய் பாதிக்கப்பட்ட இடங்களை பொதுமக்கள் கண்டறியும் வகையில் புதிய செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும். அதில் குறிப்பிட்ட விவரங்கள் நெல்லை மாவட்ட இணையதளத்திலும் பதிவு செய்யப்படும்.

நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், களக்காடு, பத்தமடை, பேட்டை, கோடீஸ்வரன் நகர் உள்ளிட்ட 8 இடங்கள் கொரோனா மையமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த மையங்களை சுற்றியுள்ள வீடுகள் கணக்கெடுத்து பரிசோதனை செய்யப்படும். அதாவது 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள வீடுகள் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

3 தனியார் ஆஸ்பத்திரிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு கொரோனா தனிமை வார்டு அமைக்கப்படுகிறது. ஏற்கனவே நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா தனிமை வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை

நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், போலீசாருக்கும் ரத்தம் பரிசோதனை செய்யப்படுகிறது. முதல் கட்டமாக அங்கு காவல் பணியில் இருந்த 10 போலீஸ்காரர்களுக்கு ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. படிப்படியாக டாக்டர் கள், நர்சுகளுக்கும் பரிசோதனை செய்யப்படும்.

இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே, மகளிர் திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story