கொரோனா ஊரடங்கால் தொழிற்சாலைகள் மூடல்: தென்காசியில் வாழ்வாதாரம் இன்றி 10 லட்சம் தொழிலாளர்கள் தவிப்பு
தென்காசியில் கொரோனா ஊரடங்கால் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாலும், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டதாலும் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
தென்காசி,
சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதற்காக கடந்த 24-ந் தேதி மாலை முதல் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்த்து வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கின்றனர்.
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு காரணமாக கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. கடந்த 15 நாட்களாக தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருப்பதாலும், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாலும் தென்காசி மாவட்டத்தில் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறார்கள்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது தென்றல் தவழும் தென்காசி மாவட்டம். இந்த மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதி விவசாய நிலங்களாகும். இங்குள்ள மக்களின் முக்கியமான தொழில் விவசாயமே.
இந்த மாவட்டத்தில் நெற்பயிர்கள் 40 ஆயிரம் ஹெக்டேரிலும், பயறுவகை பயிர்கள் 30 ஆயிரம் ஹெக்டேரிலும், தானிய பயிர்கள் 12 ஆயிரம் ஹெக்டேரிலும் பயிரிடப்படுகின்றன. இதுதவிர தோட்டக்கலை துறையை சேர்ந்த தென்னை, வாழை, கிழங்கு வகைகள், பூ வகைகள் போன்றவையும் பயிரிடப்படுகின்றன. இவற்றை நம்பி சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர். இதேபோன்று விவசாய தொழிலாளர்களும் சுமார் 75 ஆயிரம் பேர் இந்த தொழிலை நம்பி இருக்கிறார்கள்.
ஊரடங்கு காரணமாக விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. வயலில் நடவு செய்யும் பணியும், அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. மேலும், விளை பொருட்களை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலான மார்க்கெட்டுகள் மூடப்பட்டு இருப்பதால் விளைந்த பயிர்களை என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இதன் காரணமாக விவசாய கூலி தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
பீடி சுற்றும் தொழிலாளர்கள்
விவசாயத்தை அடுத்து தென்காசி மாவட்டத்தின் பிரதான தொழில் பீடி சுற்றும் தொழில் ஆகும். இதில் பெண்கள் உள்பட சுமார் 3 லட்சம் பீடி சுற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 சம்பளம் கிடைக்கும். தற்போது பீடி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டதால், இவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
இவைதவிர கட்டிட தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள், ஜவுளிக்கடை, ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலையின்றி தவித்து வருகிறார்கள். இதுபோன்று இதற்கு முன்பு இப்படி ஒரு சூழல் ஏற்பட்டது இல்லை. இதனை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை என்று அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
நிவாரணத்தொகை வழங்கப்படுமா?
எனவே, தங்களுக்கு அரசு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், அரசு நலவாரியத்தில் பதிவு செய்யாமல் உள்ள எங்களை போன்றவர்களின் உண்மை நிலையை அதிகாரிகளை கொண்டு கண்டறிந்து நிவாரணத்தொகை வழங்க வேண்டும். வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு நிற்கும் நாங்கள் கடன் வாங்கி செலவு செய்து வருகிறோம். எனவே, எங்களை போன்றோருக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியும்.
தற்போதைய சூழலில் எவ்வித வேலையும் இன்றி எவ்வித வருமானமும் இன்றி தவிக்கும் நாங்கள் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா? அப்படி நீட்டிக்கப்பட்டால் எங்களது நிலை என்ன? என்று அச்சத்தில் உள்ளோம். வசதி படைத்தவர்கள் இந்த ஊரடங்கால் பெரிய அளவு பாதிக்கப்பட போவதில்லை. ஆனால், அன்றாடம் தொழில் செய்து பிழைத்துவரும் எங்களுக்கு அரசு நிவாரணம் ஒன்றே விடிவு காலமாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story