நம்பியூர், புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; 100 வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன - ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து நாசம்


நம்பியூர், புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; 100 வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன - ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து நாசம்
x
தினத்தந்தி 9 April 2020 3:30 AM IST (Updated: 9 April 2020 1:15 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூர், புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சூறாவளிக்காற்றால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் பறந்ததுடன் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து நாசம் ஆனது.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நல்ல வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் நம்பியூர், வேமாண்டம்பாளையம், பட்டிமணியக்காரன்பாளையம், எல்லப்பாளையம், இருகாலூர், கொழந்தபாளையம், வரப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது. மாலை 4.30 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. இதைத்தொடர்ந்து 5 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. அப்போது சூறாவளிக்காற்றும் வீசியது. இந்த மழை 6 மணி வரை நீடித்தது.

1 மணி நேரம் நீடித்த சூறாவளிக்காற்றால் நம்பியூர் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளின் தகரத்தினாலான மற்றும் ஓடுகளாலான வீட்டின் மேற்கூரைகள் பறந்தன. 100-க்கும் மேற்பட்ட வேப்ப மரங்கள், ஆல மரங்கள் முறிந்து விழுந்தன. மரங்கள் மற்றும் வீட்டின் மேற்கூரைகள் விழுந்ததில் எல்லப்பாளையத்தில் 4 கார்கள் சேதம் அடைந்தன. மேலும் பட்டிமணியாரன்பாளையத்தில் 5 மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. இதன்காரணமாக அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி நம்பியூர் பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் அடியோடு சாய்ந்து நாசம் ஆனது.

இதுபற்றி அறிந்ததும் நம்பியூர் தாசில்தார் வெங்கடேஸ்வரன் மற்றும் அந்தந்த பகுதி வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு சென்று சேதங்களை பார்வையிட்டு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுதொடர்பான அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி, பனையம்பள்ளி பகுதியில் நேற்று மாலை 4.45 மணி முதல் மாலை 5 மணி வரை சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசம் ஆனது.

தாளவாடி அருகே உள்ள பனக்கள்ளி, கெட்டவாடி, கல்மண்டிபுரம், நெய்தாளபுரம், ஜீர்கள்ளி ஆகிய பகுதிகளிலும் மாலை 3 மணி முதல் 3.30 மணி வரை சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது.

Next Story