காஞ்சீபுரம் மாவட்டத்தில் தங்கி உள்ள வடமாநில தொழிலாளர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை - கலெக்டர் பொன்னையா பேட்டி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தங்கி உள்ள வடமாநில தொழிலாளர்கள் யாருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.
படப்பை,
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் 32 ஆயிரம் வடமாநில தொழிலாளர்களை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
அதன்படி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கூட்டாக தங்கி இருந்த 399 வடமாநில தொழிலாளர்கள், ஒரகடம் அடுத்த எழிச்சூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு, உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, நேற்று அந்த விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ள வடமாநில தொழிலாளர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் பொன்னையா, நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பன்னாட்டு தொழிற்சாலைகள் மற்றும் சிறு, குறு தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளது. இந்த தொழிற்சாலைகளில் தமிழகம் மட்டுமல்லாது வடமாநிலத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தங்கியிருந்து கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக மாவட்டத்தில் தங்க இடம் இல்லாமல் கூட்டமாக தங்கி உள்ள வடமாநில தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு மூன்று வேளையும் உணவளிக்கப்பட்டு வருவதுடன், மேலும் அவர்கள் மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது சுங்குவார்சத்திரம், மாம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை, கட்ராம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதியில் கூட்டாக தங்கி இருந்த 399 வடமாநில தொழிலாளர்கள் ஒரகடம் அடுத்த எழிச்சூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ள எந்த ஒரு வடமாநில தொழிலாளர்களுக்கும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது குன்றத்தூர் தாசில்தார் ஜெயசித்ரா, மண்டல துணை தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் இந்திராணி ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story