மோட்டார் சைக்கிளை எடுக்க விடாமல் தடுத்ததால் ஆத்திரம் தனியார் நிறுவன காவலாளி அடித்துக்கொலை
மோட்டார் சைக்கிளை எடுக்க விடாமல் தடுத்ததால் தனியார் நிறுவன காவலாளியை அடித்துக்கொன்ற ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பூர்,
சென்னை மண்ணடி, லிங்கி செட்டித்தெருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி, காவலாளியாக பணியாற்றி வந்தவர் மாரிமுத்து(வயது 65). இவர், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதே நிறுவனத்தில் சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத்(35) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
தற்போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இந்த தனியார் நிறுவனம் மூடப்பட்டு உள்ளது. காவலாளி மாரிமுத்து மட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி ராஜேந்திர பிரசாத், தனியார் நிறுவன வளாகத்தில் நிறுத்தி இருந்த தனது மோட்டார்சைக்கிளை எடுக்க சென்றார். அங்கிருந்த காவலாளி மாரிமுத்து, ஊரடங்கு உத்தரவு காரணமாக நிறுவனம் மூடப்பட்டு உள்ள தால் நீங்கள் உள்ளே சென்று மோட்டார்சைக் கிளை எடுக்க முடியாது என்று தடுத்தார்.
இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரபிரசாத், காவலாளி மாரிமுத்துவை அடித்து உதைத்து கீழே தள்ளினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து வடக்கு கடற்கரை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து காவலாளியை அடித்துக்கொன்று விட்டு தலைமறைவாக உள்ள ராஜேந்திர பிரசாத்தை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story