கொரோனா பரிசோதனையை விரைவுபடுத்த வேண்டும் - நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தல்


கொரோனா பரிசோதனையை விரைவுபடுத்த வேண்டும் - நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 April 2020 3:45 AM IST (Updated: 9 April 2020 3:38 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரிசோதனையை விரைவுபடுத்த வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தி உள்ளார். ராமநாதபுரம் நவாஸ்கனி எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பனைக்குளம்,

கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களுக்கும், மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கும் மட்டும் ரத்த மாதிரிகளை பெற்று பரிசோதனை செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களின் ரத்த மாதிரியையும் பரிசோதனை செய்ய வேண்டும். பல நாடுகளில் பரிசோதனை நடவடிக்கை விரைவுபடுத்தியதால்தான் அதிகமான எண்ணிக்கையில் நோய் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான சிகிச்சை வழங்கப்பட்டது.

எந்தவித அறிகுறியும் இல்லாமலேயே இந்த நோய் தொற்று பரவி மரணத்தை ஏற்படுத்துகிறது. எனவே அறிகுறி தென்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை தாமதிக்காமல் சந்தேகிக்கப்படும் அனைவரின் ரத்த மாதிரிகளையும் பெற்று முழுமையான பரிசோதனையை விரைவாக அரசு மேற்கொள்ள வேண்டும். தொற்று உறுதியாகும் பட்சத்தில் அவர்களுக்கான சிகிச்சைகளை ஆரம்ப நிலையிலேயே சிறப்பாக வழங்கவும், அவர்களின் மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கவும் இது பெரும் உதவியாக இருக்கும்.

தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் நோய்தொற்று உள்ளவரை மட்டும் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், குடும்பத்தினர் போன்றவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மட்டும் செய்து வருகிறார்கள். ஆனால் உறுதி செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் ரத்த மாதிரிகளை கொண்டு முழுமையான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதே போன்று வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உடல் வெப்பநிலை போன்ற அடிப்படை சோதனைகள் மட்டும் செய்யப்படுகிறது.

இதன்மூலம் நோய் தொற்றை முழுமையாக கண்டறிய முடியுமா என்ற கேள்வி எழுகிறது? எனவே ரத்த மாதிரிகளை பெற்று முழுமையான பரிசோதனையை தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ள அனைவரையும் பரிசோதனை செய்ய அரசு முன்வர வேண்டும். முழுமையான நோய்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையை தெளிவாக கணக்கிட்டு அவர்களுக்கு சிறப்பான சிகிச்சைகளை அளித்து முற்றிலுமாக கொரோனா நோய்தொற்று இல்லாத மாநிலமாக தமிழகத்தை பாதுகாக்க இந்த பரிசோதனை உதவும். எனவே தமிழக அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story