ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்வு - மேலும் ஒருவர் உயிரிழப்பு
மும்பை தாராவியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆகி உள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
மும்பை,
மும்பையின் இதய பகுதியில் அமைந்துள்ள தாராவி ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி ஆகும். குருவி கூடுகளை போல வீடுகளை அமைத்து மக்கள் நெருக்கமாக வசித்து வருகின்றனர். வெறும் 600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குடிசைப்பகுதியில் ஏராளமான தமிழர்கள் உள்பட சுமார் 15 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.
இந்த குடிசைப்பகுதியை கொரோனா தாக்கினால், மிகப்பெரிய விபரீதம் ஏற்படும் என்று வல்லுனர்கள் கூறி இருந்த நிலையில், இந்த ஆட்கொல்லி வைரஸ் இங்கு நுழைந்து பரவி வருகிறது.
தாராவியில் ஏற்கனவே பாலிகா நகரை சேர்ந்த 4 பேர் (ஒருவர் உயிரிழப்பு), கல்யாண்வாடியை சேர்ந்த டாக்டர், ஒர்லியை சேர்ந்த தாராவி துப்புரவு தொழிலாளி, முகுந்த் நகர், மதினா நகரை சேர்ந்த தலா ஒருவர் என 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று தாராவி முகுந்த் நகரை சேர்ந்த 25 வயது வாலிபர், தன்வாடா சாலையை சேர்ந்த 35 வயது நபர், கிராஸ் ரோட்டை சேர்ந்த 59 வயது நபர், அவரது 49 வயது மனைவி மற்றும் சோசியல் நகரை சேர்ந்த 64 வயது முதியவர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதில் முகுந்த் நகர் வாலிபர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார். தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை மாநகராட்சியினர் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் மூலம் தாராவி குடிசைப்பகுதியில் மட்டும் இதுவரை 13 பேரை கொரோனா தாக்கி உள்ளது.
இதற்கிடையே புதிதாக கொரோனா தாக்கியவர்களில் சோசியல் நகரை சேர்ந்த 64 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தாராவியில் உயிரிழப்பும் 2 ஆக அதிகரித்து உள்ளது.
தாராவியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பது குடிசைப்பகுதி மக்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story