வீட்டுக்கு கடத்தி வந்து என்ஜினீயரை தாக்கிய மந்திரி ஜித்தேந்திர அவாத்தை பதவி நீக்க வேண்டும் - தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தல்
வீட்டுக்கு கடத்தி வந்து என்ஜினீயரை தாக்கியதாக கூறப்படும் மந்திரி ஜித்தேந்திர அவாத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தி உள்ளார்.
தானே,
தானே கோட்பந்தர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் கர்முசே. கட்டுமான என்ஜினீயர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் மாநில வீட்டு வசதித்துறை மந்திரி ஜித்தேந்திர அவாத்தின் கேலி சித்திரத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தநிலையில் போலீசாரால் கடத்தப்பட்டு மந்திரி ஜித்தேந்திர அவாத்தின் வீட்டில் தாக்கப்பட்டதாக ஆனந்த் கர்முசே குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 போலீசார் எனது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என கூறினர். ஆனால் அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு பதிலாக மந்திரி ஜித்தேந்திர அவாத்தின் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு ஏற்கனவே 10 முதல் 15 பேர் இருந்தனர். நான் சென்றவுடன் பாதுகாவலர்கள் மந்திரிக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவர்கள் என்னை சரமாரியாக தாக்கினர். கம்புகள் உடைந்தவுடன் அவர்கள் என்னை லத்தி, பெல்ட், மூங்கில் பிரம்புகளாலும் தாக்கினர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தானே போலீஸ் செய்தி தொடர்பாளர் சுகதா நர்கர் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஜித்தேந்திர அவாத்தை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சட்டசபை எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதேபோல பாதிக்கப்பட்ட ஆனந்த் கர்முசேவை சந்திக்க செல்ல இருந்த தன்னை போலீசார் கைது செய்துவிட்டதாக முன்னாள் எம்.பி. கிரித் சோமையா டுவிட்டரில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story