ஊரடங்கால் திருவிழாக்கள் ரத்து வருமானம் இழந்து தவிக்கும் மண்சிற்ப கலைஞர்கள்


ஊரடங்கால் திருவிழாக்கள் ரத்து வருமானம் இழந்து தவிக்கும் மண்சிற்ப கலைஞர்கள்
x
தினத்தந்தி 9 April 2020 4:00 AM IST (Updated: 9 April 2020 7:33 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வருமானம் இழந்து கறம்பக்குடி பகுதி மண்சிற்ப கலைஞர்கள் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கறம்பக்குடி,

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கு இல்லை ஒத்துக்கொள் என்றனர் நமது முன்னோர்கள். மாறிவரும் நவீன உலகில் கைத்தொழில்கள் எல்லாம் கை கொடுக்காத தொழில்களாக போய்விட்டன. இவற்றில் எந்த நவீன தொழில் நுட்பங்களும் புகாத, பழமை மாறாத தொழிலாக மண் சிற்பம் மற்றும் மண்பாண்ட தொழில் உள்ளது. கலாசாரம் மற்றும் பண்பாடு சார்ந்த இத்தொழிலில் குயவர் எனப்படும் வேளார் இனத்தை சேர்ந்த மக்கள் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் உள்ள மழையூர், நரங்கியப்பட்டு, வெள்ளாளவிடுதி ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண் சிற்பம் மற்றும் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் செய்யப்படும் மண் சிற்பங்கள் மற்றும் மண் பானைகள் தமிழக அளவில் பிரசித்தி பெற்றது. இதனால் இப்பகுதியில் செய்யப்படும் மண் பானைக்கு நல்ல வரவேற்பும் உள்ளது.

இந்நிலையில் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தில் கோவில் திருவிழாக்கள் அதிகம் நடைபெறுவது வழக்கம். கிராம குல தெய்வங்களுக்கு மண் குதிரைகள், மண் காளைகள், பொம்மைகள் போன்றவற்றை நேர்த்திக்கடனாக பக்தர்கள் எடுத்து வருகிறார்கள். இதற்காக அனைத்து கோவில்களிலும் பொங்கல் விழா வைப்பதும் உண்டு. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் புதிய மண் பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.

இதனால் திருவிழா காலம் தொடங்கினாலே மண் பானைகளுக்கு நல்ல கிராக்கி ஏற்படும். வரும் ஆர்டர்களுக்கு ஏற்ப ஜனவரி மாதத்திலே தொழிலாளர்கள் மண் சிற்பங்கள் மற்றும் மண் பானைகளை செய்ய தொடங்கி விடுவார்கள். தற்போது கூட நரங்கிப்பட்டு, மழையூர் பகுதிகளில் ஏராளமான மண் சிற்பங்கள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வேளையில் உலகையே உலுக்கிய கொரோனா வைரசால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திருவிழாக்களுக்காக செய்யப்படும் மண் சிற்பங்கள் மற்றும் மண் பானைகள் விலைபோகாமல் உள்ளன. இதனால் வருமானத்தை இழந்து தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நரங்கியப்பட்டு கிராமத்தை சேர்ந்த மண்சிற்ப கலைஞர்கள் கூறுகையில், திருவிழாக்களின் போது தான் எங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். 3 மாதங்கள் உழைத்து தயார் செய்யப்பட்ட மண் சிற்பங்கள் வாங்குவோர் இன்றி வீணாகி விட்டன. சந்தைக்கு கொண்டு சென்ற மண்பாண்டங்களையும் விற்க முடியாமல் அப்படியே விட்டு வந்து விட்டோம். ஒரு ஆண்டிற்கான மொத்த வருமானத்தையும் இழந்து விட்டு வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறோம். எனவே எங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் கலாசாரத்தின் மண் சிற்பிகளுக்கும், மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் அரசு உதவி செய்ய வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story