மண்ணச்சநல்லூர் அருகே, டாஸ்மாக் கடையை திறந்து மது விற்ற ஊழியர்கள் உள்பட 6 பேர் கைது
மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடையை திறந்து மது விற்ற ஊழியர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சமயபுரம்,
ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் அருகே கருங்காடு பகுதியில் டாஸ்மாக் கடையை சிலர் திறந்து கொண்டிருப்பதாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர்கள், அந்த கடையின் மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன்(வயது 45), விற்பனையாளர் கோவிந்தராஜ்(47) ஆகியோர் கடையை திறந்து மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பதற்காக, அவற்றை மொத்தமாக வாங்க திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் டிரைவராக வேலை செய்து வரும் திருப்பதி(35) மற்றும் முருகன்(33), தனபால்(24), சரத்குமார்(24) ஆகியோர் வந்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர், விற்பனையாளர், கலெக்டர் அலுவலக டிரைவர் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரம் மற்றும் 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story