மேல்விஷாரம் தனியார் கல்லூரியில் 400 பேரை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க ஏற்பாடு - கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு
மேல்விஷாரம் தனியார் கல்லூரியில் 400 பேரை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்தார்.
ஆற்காடு,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, உதவி கலெக்டர் இளம்பகவத் மற்றும் அதிகாரிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க மேல்விஷாரத்தில் உள்ள தனியார் கல்லூரியை ஆய்வு செய்தனர்.
அப்போது அங்குள்ள அறைகள் கழிவறைகளுடன் கூடியவையாக உள்ளதா, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் உள்ளனவா எனவும் கேட்டறிந்தனர்.
பின்னர் கலெக்டர் திவ்யதர்ஷினி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த கல்லூரியில் சுமார் 300 முதல் 400 பேர்வரை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிப்பதற்கான இடத்தை தேர்வு செய்துள்ளோம். மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா மற்றும் ஓச்சேரி ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளையும் தேர்வு செய்து வைத்துள்ளோம். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க டாக்டர்களின் செல் நம்பர், மருத்துவமனைக்கு வரும் நபர்கள் அறிந்து கொள்ளும்படி வைக்கவும் தெரிவித்துள்ளோம். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், உதவி செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி, மேல்விஷாரம் நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம், பொறியாளர் பாபு உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story