கொரோனாவுக்கு ஒருவர் பலி எதிரொலி: மாவட்டம் முழுவதும் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் - இன்று முதல் அமல்


கொரோனாவுக்கு ஒருவர் பலி எதிரொலி: மாவட்டம் முழுவதும் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் - இன்று முதல் அமல்
x
தினத்தந்தி 9 April 2020 4:30 AM IST (Updated: 9 April 2020 7:50 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு ஒருவர் பலியானதன் எதிரொலியாக மாவட்டம் முழுவதும் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர்,

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் கொரோனாவினால் இறந்துள்ளார். இவர் வெளி மாநிலத்துக்கோ, நாடுகளுக்கோ செல்லவில்லை. இவருக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

வீடு, வீடாக அரசு அலுவலர்கள் கணக்கெடுப்புக்கு வரும்போது பொதுமக்கள் காய்ச்சல், மூச்சுத்திணறல், இருமல் மற்றும் தும்மலுக்கான அறிகுறிகள் இருந்தால் தங்கள் விவரங்களை தாங்களாகவே முன் வந்து தெரிவிக்க வேண்டும். ஒரு சிலர் தெரிவிக்காமல் விட்டுவிடுவதால் அந்தப்பகுதி அல்லது அந்த தெருவில் பலருக்கு தொற்று ஏற்பட காரணமாகிறது. எனவே பொதுமக்கள் மற்றவர்களின் நலன்கருதி ஒத்துழைக்க வேண்டும். இறந்து போனவர் வசித்து வந்த பகுதியில் தற்போது 5 துறைகளை சேர்ந்த 200 அலுவலர்கள் வீடு வாரியான கணக்கெடுப்பு பணியிலும், இன்னும் 50 நபர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேரின் உறவினர்கள் 56 பேருக்கு கொரோனா சோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர்களின் குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள் தவிர்த்து 11 பேர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு பயணம் செய்திடாத நபருக்கு அதுவும் வேலூரில் தொற்று ஏற்பட்டுள்ளது கவலைக்குரிய ஒன்றாகும்.

இனியும் பொதுமக்களும் பல்வேறு அமைப்பினரும் தங்களது பொறுப்பில் அலட்சியமாக இருந்தால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த இயலாது. தினமும் காலை நேரங்களில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் ஊரடங்கு அமலில் இருப்பதை பொருட்படுத்தாமல் வெளியே சென்று வருகின்றனர்.

பொதுமக்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை முறையே 3 நாட்களுக்கோ அல்லது 10 நாட்களுக்கோ வாங்கி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டும் தினமும் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

எனவே வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு நடைமுறைகளை மேலும் கடுமையாக்குவது அவசியமாகிறது.

எனவே இன்று (வியாழக்கிழமை) முதல் வேலூர் மாவட்டம் முழுவதும் காய்கறி கடைகள், இதர கடைகள் ஆகியவை கீழ்குறிப்பிட்டுள்ளவாறு மட்டுமே இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.

அதன்விவரம் வருமாறு:-

* மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் வாரத்துக்கு திங்கட்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் மட்டுமே காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே திறப்பதற்கு அனுமதிக்கப்படும்.

* பெட்ரோல் பங்குகள் தினமும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையும், மருந்தகங்கள் தினமும் வழக்கம்போலவும், பால் விற்பனை நிலையங்கள் தினமும் காலை 6 மணி முதல் காலை 8 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும்.

* இறைச்சி கடைகள் ஊரடங்கு காலம் முழுவதும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

* பெட்டிக்கடைகள், தள்ளுவண்டிகள், மார்க்கெட்டுக்காக ஒதுக்கி உள்ள இடங்களுக்கு வெளியே முளைத்துள்ள புதிய கடைகள் ஆகியவை அனுமதிக்கப்பட மாட்டாது.

* சமூக விலகலை கடைபிடிக்காத காரணத்துக்காக இதுவரை மூடி சீல் வைக்கப்பட்ட கடைகளும், இனி மூடி சீல் வைக்கப்பட உள்ள கடைகளும் ஊரடங்கு முடிந்த பின்னரும் அடுத்த 3 மாதங்கள் வரை திறப்பதற்கு அனுமதிக்கப்படாது. அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* அனைத்து கோவில்கள், ஆலயங்கள், மசூதிகளில் பொதுமக்களின் பிரார்த்தனைகள் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. மீறி வழிபாடுகள் நடந்தால் உரிய அமைப்பினர் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இறந்து போனவர்களை புதைப்பது அல்லது எரிப்பது தொடர்பாக தமிழக அரசு தெளிவான வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி இறந்து போனவர்களின் உடல் துணியால் பல அடுக்குகளாக சுற்றி மூடப்படும். இறுதி சடங்கிற்காக உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படாது.

எனினும் அவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும் தொலைவில் நின்று மதச் சடங்குகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும், மத ரீதியான பிரார்த்தனைகளை செய்து கொள்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள்.

அவ்வாறு அனுமதிக்கப்படும் போது இறந்து போனவர்களின் உறவினர்கள் அதிகபட்சம் 10 பேரை தவிர ஏனையோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சடலத்தை புதைப்பது அல்லது எரிப்பது தொடர்பான உள்ளாட்சி அமைப்பினை சேர்ந்த தூய்மை பணியாளர்களால் மட்டுமே நடத்தப்படும்.

எனவே பொதுமக்கள் நிலைமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story