திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் கொரோனா தொற்று குறித்து அதிவிரைவு பரிசோதனை - கலெக்டர் கந்தசாமி தகவல்


திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் கொரோனா தொற்று குறித்து அதிவிரைவு பரிசோதனை - கலெக்டர் கந்தசாமி தகவல்
x
தினத்தந்தி 9 April 2020 4:15 AM IST (Updated: 9 April 2020 7:50 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் கொரோனா வைரஸ் தொற்றுகுறித்து அதிவிரைவு பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று ஆரணி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டுகளில் உள்ள படுக்கை வசதிகளை பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் 806 நபர்களுக்கு மேல் வந்துள்ளனர். அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத் துறையினர், நகராட்சி, பேருராட்சி, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

64 நபர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 10 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப உள்ளார். 6 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவில்லை. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா பகுதிகளிலும் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் தயார்படுத்தப்பட்டு வருகிறது. ஆரணி அரசு மருத்துவமனை, தச்சூரில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 100 படுக்கை வசதிகளும், வந்தவாசி அரசு கல்லூரி, செய்யார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி பகுதிகளில் 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது.

நாளை (வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று சம்மந்தமாக அதிவிரைவு பரிசோதனை (ராபிட் டெஸ்ட்) செய்யப்பட உள்ளது. இந்த சோதனையின்போது கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என உடனடியாக கண்டறியப்படும். அப்போது படுக்கை வசதிகளை தயார்படுத்த முடியாது என்பதால் இப்போதே அனைத்து தாலுகா பகுதிகளிலும் தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்தி வருகிறோம்.

நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பொருட்களை வாங்குவதற்காக கடைகளுக்கு வந்து செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புகளை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்களாகவே வெளியில் நடமாடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆரணி உதவிகலெக்டர் மைதிலி, நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கண்ணகி, செய்யாறு சுகாதார துணை இயக்குனர் அஜிதா, அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் நந்தினி, வட்டார மருத்துவ அலுவலர்கள் சுதா, மதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story