தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் எரிவாயு குழாய் பதிக்க முயற்சி - பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் செம்பனார்கோவில் அருகே எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட தொழிலாளர்கள் முயற்சித்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொறையாறு,
சீர்காழி தாலுகா மாதானத்தில் இருந்து தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே உமையாள்புரம், காளகஸ்திநாதபுரம் வழியாக மேமாத்தூர் வரை 29 கி.மீட்டர் தூரத்திற்கு கடந்த ஆண்டு கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணியை தொடங்கியது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து குழாய் பதிக்கும் பணி சில மாதங்கள் நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்து, அதனை அரசிதழில் வெளியிட்டார். இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் ஊராட்சி வள்ளுவக்குடி கிராமத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
கொரோனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ள முயற்சித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story