புதிய பஸ் நிலையத்தில் கிருமி நாசினி சுரங்கம் - நாராயணசாமி திறந்து வைத்தார்
புதுவை புதிய பஸ் நிலையத்தில் கிருமி நாசினி சுரங்கத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார்.
புதுச்சேரி,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கிருமி நாசினிகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளைக் கழுவவும் டாக்டர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இருந்தபோதிலும் மார்க்கெட், கடைவீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் இவற்றை கடைபிடிப்பது சற்று சிரமமாக உள்ளது.
குறிப்பாக புதுவை புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி கடைகளில் நாள்தோறும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் விதமாக புதிய பஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில் கிருமிநாசினி பாதை சுரங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ளது இதில் தானாகவே கிருமி நாசினி தெளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கிருமி நாசினி சுரங்கத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் சிவா, ஜான்குமார், கலெக்டர் அருண், அரசு செயலாளர் அசோக்குமார் பாண்டா, உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்க்கண்ணன், நகராட்சி ஆணையர் சிவக்குமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story