ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் - கலெக்டர் அருண் வேண்டுகோள்
புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுவை கலெக்டர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 4 பேர் புதுச்சேரியிலும், 2 பேர் மாகியிலும் உள்ளனர். மாகியை சேர்ந்த ஒருவர் குணமாகி வீட்டுக்கு சென்றுவிட்டார். மீதி 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோட்டக்குப்பத்தில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து முத்தியால்பேட்டை பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு தீவிர கண்காணிப்பு நடந்து வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஊரடங்குக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். இன்னும் சில நாட்கள் தான் உள்ளது. இந்த கால கட்டத்திற்கும் ஒத்துழைப்பு தர வேண்டும். எனவே தயவு செய்து யாரும் வெளியே வரவேண்டாம். புதுவை மாநிலத்தில் உள்ள 4 ஆயிரம் பிற மாநில தொழிலாளர்களுக்கு போதிய வசதி செய்து தரப்பட்டுள்ளது. தெருவோரம் வசிக்கும் 1,200 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் அருண் கூறினார்.
Related Tags :
Next Story