‘சீல்’ வைக்கப்பட்ட பகுதியில் 7 பேருக்கு கொரோனா அறிகுறி?


‘சீல்’ வைக்கப்பட்ட பகுதியில் 7 பேருக்கு கொரோனா அறிகுறி?
x
தினத்தந்தி 9 April 2020 4:54 PM IST (Updated: 9 April 2020 4:54 PM IST)
t-max-icont-min-icon

சீல் வைக்கப்பட்டுள்ள அரியாங்குப்பம் பகுதியில் இருந்து 7 பேர் கொரோனா அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரி தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அரியாங்குப்பம்,

புதுவை அரியாங்குப்பம் சொர்ணா நகரில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அவர்கள் வசித்து வந்த சொர்ணா நகர் மற்றவர்கள் நுழைய முடியாதபடி சீல் வைக்கப்பட்டது. அதேபோல் அரியாங்குப்பம் மேற்கு கொம்யூன் பஞ்சாயத்து முழுவதும் முக்கிய சாலைகள் மூடப்பட்டு மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த யாரும் வெளியே வர முடியாதபடி அனைத்து இணைப்பு சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதையொட்டி அந்த பகுதியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தாராளமாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு பஞ்சாயத்து முழுவதும் தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரிகள் தாரணி மற்றும் பிரியங்கா தலைமையிலான மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தினர். இதையடுத்து தாசில்தார் ராஜேஷ் கண்ணா முன்னிலையில் அந்த பகுதியை சேர்ந்த 5 பேர் கொரோனா பரிசோதனைக் காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 2 பேருக்கு அறிகுறி இல்லை என திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 3 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று மாலை 4 பேர் பரிசோதனைக் காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களையும் சேர்த்து மொத்தம் 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்று உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. எனவே சிறப்பு மருத்துவ குழுவினர் அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story