கல்வராயன்மலையில், 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு - 40 மூட்டை வெல்லம் பறிமுதல்


கல்வராயன்மலையில், 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு - 40 மூட்டை வெல்லம் பறிமுதல்
x
தினத்தந்தி 9 April 2020 5:30 PM IST (Updated: 9 April 2020 5:30 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். மேலும் 40 மூட்டை வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.

கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதியான கல்வராயன்மலையில் 170 கிராமங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் ஓடும் தண்ணீரை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் சாராயம் காய்ச்சி வருகின்றனர். அந்த வகையில் கல்வராயன்மலை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சி, அதனை கச்சிராயப்பாளையம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் வள்ளி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், குணசேகரன், ராஜா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பரிகம், நல்லாத்தூர், கரடிசித்தூர், வடக்கநந்தல் ஆகிய பகுதிகளிலும், கல்வராயன்மலை அடிவார பகுதிகளான மாயம்பாடி, சின்னசேலம் அடி பெருமாள் கோவில், நாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் சோதனை சாவடி அமைத்து யாரேனும் சாராயம் கடத்தி செல்கிறார்களா? என சோதனை செய்தனர். மேலும் மூலக்காடு, ஆனைமடுவை, குறும்பாலூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது குறும்பாலூர் ஏரிக்கரையில் பேரல்களில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை கண்டு பிடித்து, அதனை கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக அதே பகுதியில் உள்ள வைக்கோல் போரில் பதுக்கி வைத்திருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டை வெல்லத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வடக்கநந்தல் கிராமத்தை சேர்ந்த சஞ்சய், ஈஸ்வரன், மாத்தூர் கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன், குதிரைசந்தல் கிராமத்தை சேர்ந்த கண்ணன், வெள்ளிமலை பிரபு உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர்.

Next Story